கருவடிக்குப்பம் மயானத்தில் பள்ளி நிர்வாகி உடலை தகனம் செய்ய மறுத்து ஊழியர்கள் திடீர் போராட்டம் போலீசார் சமரசம்


கருவடிக்குப்பம் மயானத்தில் பள்ளி நிர்வாகி உடலை தகனம் செய்ய மறுத்து ஊழியர்கள் திடீர் போராட்டம் போலீசார் சமரசம்
x
தினத்தந்தி 24 May 2021 10:38 PM IST (Updated: 24 May 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

புதுவை கருவடிக்குப்பம் மயானத்தில் ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கொரோனாவில் இறந்த பள்ளி நிர்வாகி உடலை தகனம் செய்ய மறுத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் தினமும் சுமார் 30 பேர் பலியாகின்றனர். இவர்களில் புதுவை பிராந்தியத்தில் இறந்தவர்களின் உடல்கள் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட கருவடிக்குப்பத்தில் உள்ள மின் மயான வளாகத்தில் உள்ள மின் தகன மேடை மற்றும் சுடுகாட்டில் எரியூட்டப்படுகிறது.

இதுதவிர தற்கொலை, இயற்கை மரணமடைபவர்களின் உடல்களும் இங்கேதான் தகனம் செய்யப்படுகிறது. இவ்வாறு கடந்த ஒரு மாதமாக தினமும் 25-க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டுவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வு இன்றி உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் நிறுவனர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் உடல் கருவடிக்குப்பம் மின்மயானத்துக்கு தகனம் செய்ய கொண்டு வரப்பட்டது.

அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய தனியார் பள்ளி நிர்வாகிகள், ஊழியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் மயானத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களை சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே மயானத்துக்கு வரவேண்டும். மற்றவர்கள் திரும்பி செல்லுமாறு கூறினர்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர்களை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், உடலை அடக்கம் செய்ய மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஸ் சுந்தர் மற்றும் லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். மேலும் மயானத்தின் முன்பு திரண்டிருந்தவர்களை அங்கிருந்து கலைந்துபோகுமாறு அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளி நிர்வாகியின் உடலை தகனம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story