தரமற்ற கவச உடையால் உடலில் கொப்பளங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகும் செவிலியரின் கண்ணீர் ஆடியோ


தரமற்ற கவச உடையால் உடலில் கொப்பளங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகும் செவிலியரின் கண்ணீர் ஆடியோ
x
தினத்தந்தி 24 May 2021 10:53 PM IST (Updated: 24 May 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

தரமற்ற கவச உடை அணிவதால் உடலில் கொப்பளங்கள் ஏற்படுவதாக செவிலியர் ஒருவர் கண்ணீர் மல்க பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றுக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களில் டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் என சுகாதார ஊழியர்கள் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர். இது சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள், ஊழியர்களுக்கு தரமற்ற முழு கவச உடைகள் (பி.பி.இ.கிட்) வழங்குவதால், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக சுகாதார ஊழியர்கள் அரசுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செவிலியர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கண்ணீர் மல்க பேசிய ஆடியோ பதிவிட்டுள்ளார். அதில், எங்களுக்கு எந்த சலுகையும் தேவை இல்லை. தரமான பி.பி.இ. கிட் வாங்கித் தந்தாலே போதும்.

தற்போது உள்ள உடையை ஒரு மணி நேரம் கூட அணிய முடியவில்லை. அதற்குமேல் அணிந்தால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. உடலில் அரிப்பு, கொப்பளங்கள் ஏற்படுகிறது. இதனால் இரவில் தூக்கம் வருவதில்லை.

நாங்கள் எவ்வளவுதான் மன்றாடுவது. ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறோம். அங்கு நடக்கும் விஷயங்களை வெளியே சொல்லக் கூடாது என்று நினைக்கிறோம். சாதாரண விஷயமாக இருந்தால் போராட்டம் நடத்துவோம். தற்போது போராட்டம் நடத்தினால் மக்களைப் பற்றி கவலை இல்லாமல் போராட்டம் நடத்துகிறோம் என்று கூறுவார்கள்.

எங்களுக்கு நஷ்டஈடு வேண்டாம், உயிர் பாதுகாப்பு கொடுத்தால் போதும். இதற்கு நல்ல, தரமான கவச உடை வாங்கித்தர வேண்டும். சக ஊழியர்கள் தொற்றால் இறப்பதால் மற்றவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story