அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை


அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 24 May 2021 11:06 PM IST (Updated: 24 May 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம், 
 கொரோனா நோயாளி களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 3252 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,248 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 205 நபர்களும், பரமக்குடி அரசு மருத்துவமனையில் 99 நபர்களும், தனியார் மருத்துவமனைகளில் 69 நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை பணியாளர்கள் மருத்துவ ஆக்சிஜன் பயன்பாடு குறித்து உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். தேவைக்கேற்ப மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பு வைக்கப் பட்டுள்ளதை முன்னெச்சரிக்கையாக உறுதி செய்திட வேண்டும்.
சிறப்பு குழு
மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு சத்தான உணவு தரமான முறையில் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும்.  ஊராட்சி அளவில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த பணியாளர்களை ஒருங்கிணைத்து சிறப்புகுழு அமைக்க வேண்டும். 
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிரமமின்றி சென்று சேர்வதை இக்குழுவினர் கண்காணிக்க உதவ வேண்டும். ஊரக பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக ஒவ்வொரு வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் காய்ச்சல் அறிகுறி கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
நடவடிக்கை
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டண நடைமுறையை பின்பற்ற வேண்டும். இதனை மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் கண்காணிக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ், அவர்தம் வாரிசுதாரர்களுக்கு வாரிசு சான்றிதழ் காலதாமதம் இல்லாமல் வழங்கப்படுவதை வருவாய்த்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சிவகாமி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ், ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிகுமார், ராம நாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் குருதிவேல்மாறன், ஜெயதுரை உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
உத்தரவு
முன்னதாக ராமநாதபுரம் கலெக்டர்  24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் செயல்பாடை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு அதிக பட்சம் 30 நிமிடங்களுக்குள் தீர்வு காணும் வகையில் அலுவலர்கள் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். 

Next Story