18 முதல் 44 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி;அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்


18 முதல் 44 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி;அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 May 2021 11:30 PM IST (Updated: 24 May 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூர்
கட்டுப்பாட்டு அறை ஆய்வு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை நேற்று மின்சாரம், மதுவிலுக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற தொலைபேசி அழைப்புகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் கொண்ட கபசுர குடிநீரை மாவட்டம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வழங்கிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 
தடுப்பூசி செலுத்தும் பணி
பின்னர் வி.செந்தில்பாலாஜி பவுண்டேசன் சார்பில் ரூ.26 லட்சம் மதிப்பிலான 4 டன் கபசுர குடிநீர் பொடியை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி, பொதுமக்களுக்கு பயன்படுத்த அமைச்சர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கரூர் கோவிந்தபாளையம், வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் புகளூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை வளாகத்தில் 156 படுக்கை ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு வரும கொரோனா சிறப்பு வார்டுகளின் இறுதி கட்ட பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமைச்சர் பேட்டி
பின்னர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1077, 04324-256306, 04324-257510 உள்ளிட்ட தொலைபேசி எண்களிலும், 9498747637 மற்றும் 94987447638 ஆகிய எண்களிலும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
16,500 தடுப்பூசிகள்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ரூ.26 லட்சம் மதிப்பில் 4 டன் கபசுரகுடிநீர் பொடி ெபாதுமக்களுக்கு வழங்குவதற்கு கலெக்டரிடம் வழங்கி உள்ளோம். தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக வழங்கப்படும். இதில் 18 வயது முதல் 44 வயதிற்குக்குட்பட்ட அனைவருக்கும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 16,500 தடுப்பூசிகள் போடுவதற்கு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஒரே நாளில் 2000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டள்ளது. கரூர் காகித ஆலை வளாக்தில் கொரோனா சிறப்பு முகாம் அமைக்கும் பணி இறுதி கட்டதை எட்டியுள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார். 
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சிகளில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. பி.ஆர்.இளங்கோ மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பாலகணேஷ், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் செயல் இயக்குனர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story