2-வது ஆண்டாக திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து பக்தர்கள் வேதனை


2-வது ஆண்டாக திருமணஞ்சேரி   சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து  பக்தர்கள் வேதனை
x
தினத்தந்தி 24 May 2021 6:02 PM GMT (Updated: 24 May 2021 6:02 PM GMT)

2-வது ஆண்டாக திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கறம்பக்குடி:
சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரியில் பிரசித்திபெற்ற சுகந்த பரிமளேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில் சோழ சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு காரியம் கைகூடும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் இந்த கோவிலுக்கு வந்து செல்வர்.
சிறப்புமிக்க இந்த கோவிலில் சித்திரை தமிழ் புத்தாண்டு தொடங்கி வைகாசி விசாகம் வரை உற்சவ தினங்கள் ஆகும். இந்நாட்களில் தினமும் சுகந்த பரிமளேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று உற்சவர்களின் சேஷ வாகன வீதி உலா நடைபெறும். இறுதிநாளான வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடக்கும் இதை காணமாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.
தேரோட்டம் ரத்து 
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சித்திரை திருவிழா மற்றும் விசாக தேரோட்டம் நடைபெறவில்லை. எனவே இந்த ஆண்டாவது தேரோட்டம் நடக்கும் என பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கொரோனா 2-ம் அலையின் கோரத்தாண்டவத்தால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த வைகாசி விசாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர். 
இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், 24-ந்தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என நினைத்தோம், எனவே உள்ளூர் பக்தர்களை பங்கேற்க செய்து எளிமையாக தேரோட்டம் நடைபெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் தளர்வுகள் அற்ற ஊரடங்கால் தேரோட்டத்தை இந்த ஆண்டும் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. 4 ஆண்டுகளுக்கு முன் புதிய தேர் செய்யப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருப்பது எங்கள் பகுதி மக்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது எனக் கூறினார்.

Next Story