விளை நிலங்களை ஆக்கிரமித்து வளரும் பார்த்தீனியம் செடி


விளை நிலங்களை ஆக்கிரமித்து வளரும் பார்த்தீனியம் செடி
x
தினத்தந்தி 24 May 2021 11:44 PM IST (Updated: 24 May 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் விளை நிலங்களை ஆக்கிரமித்து வளரும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

தளி
உடுமலை பகுதியில் விளை நிலங்களை ஆக்கிரமித்து வளரும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
சாகுபடி பணி
வானம் பொழிந்த பின்பு நிலத்தை உழுது பயன்படுத்தி சாகுபடி பணிகள் இனிதே தொடங்கப்படுகிறது. கூடுதல் விளைச்சலை ஈட்டி அதிகளவு வருமானத்தை பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் பயிரிடுதலில் முனைப்பு காட்டுகின்றனர் விவசாயிகள். தரமான விதையை தேர்ந்தெடுத்து தண்ணீர் பாய்ச்சி உரம் இட்டு செடியை வளர்ப்பார்கள். 
ஆனால் கூடவே வளரும் களைச்செடிகள் வருமானத்தின் பெரும் பகுதியை விழுங்கி விடுகிறது. விவசாயியின் உழைப்புக்கான இழப்பு களை எடுப்பதில் இருந்து தான் ஆரம்பமாகிறது. ஆனால் ஒருசில களைச்செடிகளை முழுமையாக ஒழிக்க முடியாமல் விவசாயிகள் இன்றளவும் திணறி வருகின்றனர்.
பார்த்தீனியம் செடிகள்
அதில் ஒன்றுதான் பார்த்தீனியம் செடிகள். ஒரு சதுரடியில் ஒரு செடி இருந்தால் போதும் படிப்படியாக இனப்பெருக்கம் செய்து நிலத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து விடும். அதற்கு பராமரிப்பு, உரம், தண்ணீர் வேண்டியதில்லை. கோடை காலத்தில் அழிந்து விடுவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மழை பெய்தவுடன் அதன் ஈரம் காய்வதற்குள் முளைத்து பூக்கள் பூத்து தன் இனத்தை அசுர வேகத்தில் பெருக்கி விடும் ஆற்றல் பார்த்தீனியம் செடிகளுக்கு உண்டு. 
அதை பூப்பூக்கும் முன்பு அழித்தால்தான் உண்டு. விளை நிலங்கள், சாலைஓரங்கள் நீர்நிலைகள் என எங்கும் பார்த்தீனியம் செடிகளின் ஆதிக்கம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இந்த செடிகளால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மனிதனுக்கு சொறி, சிரங்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட ஒவ்வாமையை ஏற்படுத்துவதோடு கால்நடைகளுக்கு உடல் சார்ந்த சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது.
அழிக்கவேண்டும்
அதை ஒழிக்கும் முறையை முழுமையாக தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். ஆண்டுக்கணக்கில் போராடினால் மட்டுமே அதன் பரவலை தடுத்து நிறுத்த முடியும். பின்பு அதனை எளிதில் அழித்துவிடலாம். இதற்காக விவசாயிகளுக்கு தோள் கொடுத்து பார்த்தீனியம் செடிகளை ஒழிப்பதற்கு வேளாண்துறையினர் வழிகாட்ட வேண்டும். இது சம்பந்தமாக தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆனாலும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க முடியாது. எண்ணற்ற விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும், வருமான இழப்புக்கும் பெரும் தடைக்கல்லாக உள்ள இந்த செடிகளை ஒழிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story