நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கூறினார்.
நாமக்கல்:
அதிகாரிகளுடன் ஆலோசனை
நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள், முழு ஊரடங்கு அமல்படுத்தும் பணிகள், பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் வழங்கும் பணிகள், பால் மற்றும் குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நாமக்கல் விருந்தினர் மாளிகையில் நேற்று மாவட்ட கலெக்டர் மெகராஜ் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நான் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து தற்போது மாவட்டத்திற்கு வந்து உள்ளேன். கலெக்டர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவை, டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நிலைமை குறித்து கேட்டறிந்தேன்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை
நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. போதிய அளவு ஆக்சிஜன் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. படுக்கைகள் நாளுக்கு நாள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. கடுமையாக பாதிக்கப்படும் நோயாளிகள் தேறிய பிறகு அவர்களை தங்க வைத்து கண்காணித்து அனுப்ப கல்லூரி மற்றும் திருமண மண்டபங்களில் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 16 டாக்டர்கள் மற்றும் 45 நர்சுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நமது மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால், இறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மொத்தம் 2,450 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் 1,797 படுக்கைகள் நிரம்பி உள்ளன. மீதமுள்ள 653 படுக்கைகள் காலியாக உள்ளன.
தொற்று குறைய வாய்ப்பு
ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை பொறுத்த வரையில் 768 படுக்கைகள் மொத்தம் உள்ளன. இவற்றில் 747 படுக்கைகள் நிரம்பி விட்டன. 21 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. நாளை (இன்று) முதல் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். மேலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு இருப்பதால், தொற்று குறைய வாய்ப்பு உள்ளது. சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஸ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story