மாவட்டம் முழுவதும் அமைதி நிலவியது


மாவட்டம் முழுவதும் அமைதி நிலவியது
x
தினத்தந்தி 25 May 2021 12:36 AM IST (Updated: 25 May 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று அரசு அறிவித்த தளர்வற்ற முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் அமைதி நிலவியது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று அரசு அறிவித்த தளர்வற்ற முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் அமைதி நிலவியது.
 முழு ஊரடங்கு 
தமிழகம் முழுவதும் பரவலாக கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு நேற்று முதல் இம்மாத இறுதிவரை தளர்வற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்தது.
 அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்திலும் தளர்வற்ற முழுஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. இதனால் அனைத்து பிரதான சாலைகளிலும் வாகன போக்குவரத்து ஏதும் இல்லாத நிலையில் சாலைகள் வெறிச்சோடின. பஸ் நிலையங்கள் பாலைவனம் போல் காட்சி அளித்தன. கடை வீதிகளும், காய்கறி மார்க்கெட்டுகளும் வருவோர் போவோர் யாரும் இன்றி வெறிச்சோடி கிடந்தன.
மருந்துகடைகள்
 நேற்று அரசு விதிவிலக்கு அளித்துள்ள நிலையில் மருந்து கடைகள், நாட்டு மருந்து கடைகள், பால் மற்றும் பத்திரிகை விற்பனை நிலையங்கள் செயல்பட்டன. ஆனாலும் சில பகுதிகளில் போலீசார் பத்திரிகை விற்பனை நிலையங்களுக்கு அனுமதி கிடையாது என கூறியதால் பிரச்சினை ஏற்பட்டது.
 தனியார் ஆஸ்பத்திரிகள் வழக்கம்போல் இயங்கின. பெட்ரோல் பங்குகளும் செயல்பட்டது. ஆனாலும் வாகனங்கள் மிக குறைவாகவே வந்த நிலை இருந்தது. ெரயில் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கான ெரயில்களில் வருவோர் எண்ணிக்கை மிக குறைவாக இருந்த நிலையில் ஆட்டோக்கள் செயல்படாததால் வந்த பயணிகள் சிரமப்படும் நிலை இருந்தது.
சிறப்பு பஸ்கள் 
 அரசு அலுவலர்களுக்காக மட்டும் சிறப்பு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டன.  அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளை தவிர வேறு வாகனங்கள் செயல்படவில்லை. ஆட்டோக்கள் முற்றிலுமாக முடங்கின.
 வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படும் என வங்கி குழுமம் அறிவித்துள்ள நிலையில் பணியாளர்கள் 33 சதவீதம் பேர் சுழற்சிமுறையில் வங்கிகளில் பணியமர்த்தப் பட்டிருந்தனர்.
 ஏ.டி.எம். மையங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. ஆனாலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மொத்தத்தில் மாவட்டம் முழுவதும்  முழு ஊரடங்கால் முழு அமைதி நிலவியது.
கடைகள் அடைப்பு 
சேத்தூர், தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூர், முத்துசாமிபுரம், தேவதானம் கோவிலூர் ஆகிய பகுதியில் ஒரு சில ஓட்டல்கள் மட்டும் திறந்து பார்சல் சேவை செய்தது. மருந்தகங்கள், ஆவின் பால் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
அருப்புக்கோட்டை 
அருப்புக்கோட்டையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டதால் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. 
தேவையில்லாமல் வெளியில் சுற்றுவோர்களை தடுப்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் ராஜபுஷ்பா, வசந்தி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம் 
ஆலங்குளம் பகுதியில் உள்ள கிராமங்களில் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சாலைகளில் மக்கள், வாகனங்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
சிவகாசி 
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் முதல் நாளான நேற்று காலை 6 மணியில் இருந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெளியே வந்த மக்களிடம் தீவிர விசாரணைக்கு பின்னர் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை அனுமதித்தனர். 
சிவகாசி நகரம், திருத்தங்கல் நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல் ராஜ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் தீவிர ரோந்து பணியால் பொது மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. உரிய அடையாள அட்டைகள் வைத்திருந்த முன்கள பணியாளர்களை மட்டும் அனுமதித்தனர். சிவகாசி தாலுகாவில் பல அரசு கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் பணியாற்றுபவர்கள் தங்கள் கோவிலுக்கு சென்ற போது அவர்களை போலீசார் அனுமதிக்க மறுத்தனர். பின்னர் அடுத்த முறை வரும் போது உரிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். மொத்தத்தில் போலீசாரின் தீவிர கண்காணிப்பால் சிவகாசி தாலுகா பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.

Next Story