அரியலூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை


அரியலூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 25 May 2021 1:05 AM IST (Updated: 25 May 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடின.

அரியலூர்:

கடைகள் அடைப்பு
கொரோனா பரவலை தடுக்க தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று அரியலூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. இதையொட்டி அரியலூர் நகரில் அரசால் அனுமதிக்கப்பட்ட மருந்து கடை, பால் விற்பனையகம் போன்றவை திறந்திருந்தன. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மருத்துவமனைகள் செயல்பட்டன. ஓட்டல்களில் பார்சலில் உணவு விற்பனை நடைபெற்றது. பஸ் நிலையம், அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் திறந்து இருந்தன. குறைந்த அளவே உணவு விற்பனை நடந்தது. பஸ், ஆட்டோக்கள் முழுமையாக ஓடவில்லை.
காலை 10 மணி வரை ஒரு சில இருசக்கர வாகனங்கள் நகருக்குள் வந்தன. அதனை போலீசார் சோதனை செய்து தேவையில்லாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினார்கள். அரசு பணியாளர்கள் பணிக்கு வரும்போது கழுத்தில் அரசு வழங்கிய அடையாள அட்டையை மாட்டிக்கொண்டு வர வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். நகராட்சி தூய்மை பணியாளர்கள் வழக்கம்போல் நகரில் குப்பைகளை அகற்றினார்கள்.
வியாபாரம் குறைவு
நகரின் பல இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. அரியலூர் பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகளுக்காக கிராமங்களில் இருந்து வந்தவர்கள் சுமார் 100 பேர் கூடி நின்றனர். அவர்களை போலீசார் கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தினார்கள். கட்டுமான பணிகள் நடைபெறுவதை 31-ந் தேதி வரை தடை செய்தால் நகரில் மக்கள் போக்குவரத்து வெகுவாக குறையும்.
நகராட்சியின் சார்பில் காய்கறி, பழவகைகள் வேன்கள் மூலம் 18 வார்டுகளுக்கும் அனுப்பப்பட்டன. நேற்று முன்தினம் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்கியிருந்ததால் வியாபாரம் குறைவாகவே நடந்தது. அரியலூர் நகரை சுற்றி உள்ள அரசு மற்றும் தனியார் சிமெண்டு ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்டு மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பெரும்பாலான நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் பகுதியிலும் அனுமதிக்கப்பட்ட கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு ஒருவழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளன. ஜெயங்கொண்டம் 4 ரோடு சந்திப்பில் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் போலீசார் ஜெயங்கொண்டம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்ற வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மருத்துவ சேவை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்தபோது, அந்த வாகனம் ஒரு டாக்டரின் உறவினர் வாகனம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டி வரக்கூடாது என்று கூறிய போலீசார், ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை அகற்றச்சொல்லி, அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
மேலும் தொடர்ந்து 24 மணி நேரமும் ஜெயங்கொண்டம் பகுதியில் தீவிர வாகன சோதனை நடைபெறும் என்றும், எனவே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் துணை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். இதற்கிடையே கோட்டாட்சியர் அமர்நாத், தாசில்தார் ஆனந்த், நகராட்சி ஆணையர் சுபாஷினி, இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ஷகிராபானு, சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், காதர்கான் உள்ளிட்ட ஏராளமான போலீசார் நகரை சுற்றி வலம் வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டம் நகரை சுற்றியுள்ள குறுக்கு பாதைகளான ஜூபிலி ரோடு, சேவகத்தெரு, தேவாங்க முதலியார் தெரு, பஸ் நிறுத்தம், அண்ணா சிலை முகப்பு, போலீஸ் நிலைய சந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து அடைத்தனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் நான்கு ரோடு வழியாக வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தியதை கண்ட வாகன ஓட்டிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். இருப்பினும் மருத்துவ காரணங்களுக்காவும், மருந்து, மாத்திரை வாங்க செல்வதாகவும் பலர் கூறி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீன்சுருட்டி, தா.பழூர்
மீன்சுருட்டி பகுதியில் நேற்று மருந்து கடைகள், பால் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சில இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சென்றன. ஒரு சில வாகனங்கள் போலீசாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சாலைகளில் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
தா.பழூர் பகுதியில் சுத்தமல்லி பிரிவு சாலை, இடங்கண்ணி சாலை மற்றும் மதனத்தூர் சாலைகளில் நேற்று இருசக்கர வாகனங்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் இ-பதிவு செய்த வாகனங்களை மட்டுமே தொடர்ந்து பயணிக்க அனுமதித்தனர். அவசர மருத்துவ தேவைக்காக சென்றவர்களை ஆய்வு செய்து அனுப்பினர்.

Next Story