தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிப்பு


தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிப்பு
x
தினத்தந்தி 24 May 2021 7:36 PM GMT (Updated: 24 May 2021 7:36 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

பெரம்பலூர்:

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் தமிழகத்தில் நேற்று அதிகாலை 4 மணி முதல் வருகிற 31-ந்தேதி அதிகாலை 4 மணி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4 மணி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கில் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன் கடை, இறைச்சி கடைகள் ஆகியவையும் திறக்க அனுமதி கிடையாது. இதனால் நேற்று அந்த கடைகளும், இதர கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்களும் இயக்கப்படாததால் சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன. பொதுமக்களும் தேவையின்றி வெளியே வராமல் வீட்டிலேயே இருந்தனர்.
மருந்தகம்-நாட்டு மருந்து கடைகள்
பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் விற்பனை பெரம்பலூரில் நகராட்சி சார்பிலும், தோட்டக்கலைத்துறை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்தும் வாகனங்கள் மூலமாக காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களை நேற்று முன்தினமே வாங்கி வைத்திருந்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டிருந்த மருந்து கடைகள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் இயங்கின. பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம் நடைபெற்றது. மாவட்டங்களில் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கின. அரசு ஒதுக்கிய நேரங்களில் ஓட்டல்களில் பார்சல் உணவு விற்பனை செய்யப்பட்டது. அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கின. பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள், வங்கிகள், ஏ.டி.எம். மையம் வழக்கம்போல் இயங்கின. தூய்மை பணியாளர்கள் நேற்று வழக்கம் போல் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.
தேவையில்லாமல் சுற்றியவர்கள் மீது வழக்கு
முழு ஊரடங்கில் பெரம்பலூர் மாவட்ட எல்லைகளிலும், பெரம்பலூர் நகர்ப்பகுதியிலும், முக்கியமான பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். வாகன சோதனையில் வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கும், அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் சரக்கு வாகனங்கள் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் போலீசார் அனுமதித்தனர்.
உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு செய்தவர்களை மட்டும் அனுமதித்தனர். மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்கவும் போலீசார் அனுமதித்தனர். பெரம்பலூர் நகர்ப்பகுதியில் முக்கிய இணைப்பு சாலைகளை போலீசார் தடுப்பு கம்பிகள் வைத்து அடைத்திருந்ததால், ஒரே சாலையில் வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய முடிந்தது.

Next Story