வெறிச்சோடிய சாலைகள்


வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 25 May 2021 1:06 AM IST (Updated: 25 May 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி காரைக்குடி, திருப்புவனத்தில் சாலைகள் வெறிச்சோடின. சாலையில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

காரைக்குடி,

தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி காரைக்குடி, திருப்புவனத்தில் சாலைகள் வெறிச்சோடின. சாலையில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தளர்வில்லா முழு ஊரடங்கு

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் போலீசார் காலை முதல் தீவிரமாக சோதனை நடத்தினர்.
இதையடுத்து சாலைகளில் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் மறித்து என்ன காரணத்திற்காக வெளியில் சுற்றித்திரிகின்றீர்கள் என விசாரணை நடத்தி அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

காரைக்குடி

காரைக்குடி பகுதியில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் ஆலோசனையின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் போலீசார் புதிய பஸ் நிலையம், வாட்டர் டேங்க் பகுதி, பெரியார்சிலை பகுதி, அண்ணாசிலை, பழைய பஸ் நிலையம், கழனிவாசல், ஸ்ரீராம்நகர் ரெயில்வே கேட், கோவிலூர் சோதனை சாவடி நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காலை முதல் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை மறித்து விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.நேற்று மதியத்திற்கு மேல் வாகன நடமாட்டம் குறைந்ததால் காரைக்குடியில் பல்வேறு இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்புவனம்

 திருப்புவனத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கால் பழைய சந்தை திடல் சோதனைச்சாவடி அருகேயும், தெப்பக்குளம் முன்பும், நரிக்குடி சாலை உள்ளிட்ட பல சாலைகளில் தடுப்புகள் அமைத்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்..தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள், வீதியில் நடந்து செல்பவர்களை எச்சரித்து அனுப்பினார்கள். இதனால் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் மதுரை -மண்டபம் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் நரிக்குடி சாலை, திருப்புவனம்- சிவகங்கை சாலை உள்பட பல சாலைகள், வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி சிங்கம்புணரியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வீதியே வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story