கிராம நிர்வாக அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று போலி சான்றிதழ் கொடுத்த ரத்த பரிசோதனை மையத்திற்கு சீல் வைப்பு


கிராம நிர்வாக அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று  போலி சான்றிதழ் கொடுத்த ரத்த பரிசோதனை மையத்திற்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 25 May 2021 1:18 AM IST (Updated: 25 May 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று போலி சான்றிதழ் கொடுத்த ரத்த பரிசோதனை மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று போலி சான்றிதழ் கொடுத்த ரத்த பரிசோதனை மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கிராம நிர்வாக அதிகாரி

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த ஒருவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மேலும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவரை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். 

அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்று டாக்டர்கள் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். 

போலி சான்றிதழ்

இதையடுத்து அவரை உறவினர்கள் சிலர் பாவூர்சத்திரத்தில் மருந்தகம் மற்றும் ரத்தப்பரிசோதனை மையம் நடத்தி வரும் ஜான்ராஜாமணி (வயது 43) என்பவரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது, கொரோனா பரிசோதனை செய்து அதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்று ஒரு போலி சான்றிதழை        தரமாறு     கேட்டனர். அவரும், அதுபோல் போலி சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் கிராம நிர்வாக அதிகாரியை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் எந்த ஆஸ்பத்திரியிலும் அவரை சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.

சீல் வைப்பு

இந்த போலி சான்றிதழ் விவகாரம் குறித்து தென்காசி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் மற்றும் சுகாதார துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, ஜான்ராஜாமணி கொடுத்துள்ளது போலியான பரிசோதனை சான்றிதழ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து தென்காசி மாவட்ட மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சங்கரநாராயணன், தென்காசி தாசில்தார் (பொறுப்பு) முருக செல்வி, கல்லூரணி வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், பாவூர்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜகுமார், கிராம நிர்வாக அதிகாரி சேர்மன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா ஆகியோர் சம்பந்தப்பட்ட மருந்தகம், ரத்தப்பரிசோதனை மையத்திற்கு நேரில் சென்றனர். பின்னர் அவற்றை மூடி சீல் வைத்தனர். இதற்கிடையே ஜான்ராஜாமணி தலைமறைவாகிவிட்டார். 

ஏற்கனவே அவர் மீது பல புகார்கள் வந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பாவூர்சத்திரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story