31 வயது பெண் உள்பட 12 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 1,467 பேருக்கு தொற்று உறுதி


31 வயது பெண் உள்பட  12 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 1,467 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 25 May 2021 1:45 AM IST (Updated: 25 May 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 31 வயது பெண் உள்பட 12 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 31 வயது பெண் உள்பட 12 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மெதுமெதுவாக தொற்று பாதிப்பு வேகமெடுத்து வந்தது. கடந்த 15 நாட்களில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவ தொடங்கியது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வந்தார்கள். அந்த பாதிப்பு தற்போது 1,500-யை எட்டியுள்ளது.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பலி எண்ணிக்கையும் மற்ற மாவட்டங்களை விட குறைவாக காணப்பட்டது. தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் பலி எண்ணிக்கையும் உயர தொடங்கியது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரே வாரத்தில் 25 பேர் பலியானார்கள். தற்போது அந்த நிலையும் மிகவும் மோசமடைந்து விட்டது. இதுவரை இல்லாத வகையில் ஒரு நாளில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியான பரிதாபமான நிலை ஏற்பட்டு உள்ளது.
12 பேர் பலி
ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகள் கிடைக்காமல் நோயாளிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கொரோனா சிகிச்சை மையங்களும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியின்படி ஈரோடு மாவட்டத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர். இதில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 31 வயது பெண் கடந்த 21-ந் தேதி பரிதாபமாக இறந்தார். இதேபோல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டி 8-ந் தேதியும், 52 வயது ஆண் மற்றும் 70 வயது முதியவர் 14-ந் தேதியும், 70 வயது முதியவர் 16-ந் தேதியும், 75 வயது முதியவர் 18-ந் தேதியும், 51 வயது பெண் 19-ந் தேதியும், 54 வயது ஆண் மற்றும் 63 வயது முதியவர் 21-ந் தேதியும், 63 வயது முதியவர் மற்றும் 54 வயது பெண் 22-ந் தேதியும், 57 வயது ஆண் 23-ந் தேதியும் பலியானார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது.
11,810 பேருக்கு சிகிச்சை
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 818 ஆக உயர்ந்தது. இதில் 32 ஆயிரத்து 756 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளார்கள்.
நேற்று மட்டும் 848 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டார்கள். தற்போது வரை 11 ஆயிரத்து 810 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story