சேலம் மாவட்டத்தில் கடந்த 14 நாட்களில் சாராயம் காய்ச்சியதாக 262 பேர் கைது
சாராயம் காய்ச்சியதாக 262 பேர் கைது
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாவட்டத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டது. அப்போது யாரேனும் சாராயம் காய்ச்சுகிறார்களா? அல்லது விற்பனை செய்கிறார்களா? என தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதன்படி கடந்த 10-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 14 நாட்களில் சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக மது விலக்கு குற்றங்கள் தொடர்பாக 273 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு 4 சக்கர வாகனமும், 24 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 38 லிட்டர் சாராயமும், 3 ஆயிரத்து 550 லிட்டர் சாராய ஊரல்களும் கைப்பற்றி அழிக்கப்பட்டது. சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story