தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்: சேலத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை


தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்: சேலத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 25 May 2021 4:03 AM IST (Updated: 25 May 2021 4:03 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் தீவிர வாகன சோதனை

சேலம்:
தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சேலம் மாநகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நேற்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அத்தியாவசிய தேவையின்றி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை பிடிக்க சேலம் கலெக்டர் அலுவலகம், அஸ்தம்பட்டி ரவுண்டானா, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
700 போலீசார்
சேலம் மாநகர் பகுதியில் மட்டும் மொத்தம் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தேவையின்றி வாகனத்தில் வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர். ஒரு சிலருக்கு அபராதம் விதித்தனர். அதேபோன்று மோட்டார் வாகன ரோந்து பிரிவு, கார் ரோந்து பிரிவு போலீசார் மாநகர் பகுதி முழுவதும் சுற்றி, சுற்றி வந்து தீவிர சோதனை நடத்தினர்.
நோயாளிகள்
முழு ஊரடங்கு இருந்தபோதும் சேலம் அரசு ஆஸ்பத்திரி சாலையில் அதிக அளவு வாகன போக்குவரத்து இருந்தது. இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது தொற்று பாதித்தவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர வேண்டிய நிலையில் ஆம்புலன்ஸ் கிடைக்காத சில சமயங்களில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் நோயாளிகளை அழைத்து வருகின்றனர். இதனால் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. நோயாளிகளை அழைத்து வரும் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறினர்.

Next Story