18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில் முதல்கட்டமாக சுகாதாரத்துறையினர் உள்பட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், அதையடுத்து 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இதற்கிடையே கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
2 ஆயிரம் பேர்
இதில் மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால், தமிழக அரசால் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டனர். மேலும் இன்னும் ஒருசில நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கிடையே திண்டுக்கல் அரசு மருத்துவமனை, மாநகராட்சி கமலாநேரு மருத்துவமனை ஆகியவற்றில் ஏராளமானோர் குவிந்தனர்.
இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் உருவானது. அதேநேரம் கொரோனா பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் பலர் வருவதால் தடுப்பூசி போட வருவோருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தடுப்பூசி போடும் மையங்களை அதிகரிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story