கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்: மயிலாடுதுறையில், மளிகை-காய்கறி கடைகள் அடைப்பு - சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு


கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்: மயிலாடுதுறையில், மளிகை-காய்கறி கடைகள் அடைப்பு - சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு
x
தினத்தந்தி 25 May 2021 6:31 PM IST (Updated: 25 May 2021 6:31 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மளிகை, காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சாலையின் நடுவே தடுப்பு அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் தீவிரமாகி வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆகையால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

முன்னதாக கடந்த 10-ந் தேதி அமல்படுத்தப்பட்ட 2 வார ஊரடங்கில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஒருவார கால ஊரடங்கில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை திறக்க அனுமதி இல்லை. பால் கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தளர்வு இல்லாத ஊரடங்கு காரணமாக மயிலாடுதுறையில் நேற்று பால்கடைகள், மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன. இதனால் மயிலாடுதுறையில் அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டது.

நகரின் போக்குவரத்து மிகுந்த சாலைகளின் நடுவே போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை நிறுத்தி விசாரணை செய்த பிறகே போலீசார் அனுப்பி வைத்தனர்.

மருத்துவம் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு செய்தவர்கள் உரிய சான்றிதழை காண்பித்த பிறகு கார்களில் பயணம் செய்ய போலீசார் அனுமதித்தனர்.

நேற்று மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களுடைய 126 மோட்டார் சைக்கிள்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 143 விதி மீறல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக திருக்கடையூர், ஆக்கூர், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பால் கடைகள், மருந்துக்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் சாலைகளில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொறையாறு, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், பரசலூர், சங்கரன்பந்தல், திருக்களாச்சேரி உள்ளிட்ட இடங்களில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட எல்லைப்பகுதியான நண்டலாறு சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இ-பதிவு இல்லாமல் கார், வேன், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் எச்சரித்து, வந்த வழியாக திருப்பி அனுப்பி வைத்தனர்.

சீர்காழியில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு காரணமாக பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கடைவீதி, பிடாரி வடக்கு வீதி, கொள்ளிடம் முக்கூட்டு, தென்பாதி, ஈசானிய தெரு, ெரயில்வே ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள பால் கடை, பெட்ரோல் பங்க், மருந்தகம், உணவு விடுதி தவிர அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டதால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட தெற்கு வீதி, மேல வீதி, கீழவீதி, மயிலாடுதுறை சாலை, மணல்மேடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் முழு ஊரடங்கையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story