வயல்களில் 2,200 டன் கரும்பு தேக்கம்
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்ததால் 2,200 டன் கரும்பு தேக்கமடைந்து வந்தது. அதனால் விவசாயிகள், டிரைவர்கள் மற்றும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
உடுமலை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்ததால் 2,200 டன் கரும்பு தேக்கமடைந்து வந்தது. அதனால் விவசாயிகள், டிரைவர்கள் மற்றும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான கரும்பை கொள்முதல் செய்வதற்கு அரசால் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழனி ஆகிய தாலுகாக்களில் உள்ள ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளிடமிருந்து ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், பழனி, நெய்க்காரப்பட்டி ஆகிய கோட்ட கரும்பு அலுவலகங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்யப்பட்டு ஆலை அரவைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி 2020 2021ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு 622 விவசாயிகளிடமிருந்து 695 ஏக்கர் கன்னி கரும்பும், 1,005 ஏக்கர் கட்டைகரும்பும் என மொத்தம் 1,700 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆலை அரவைக்கு 71 ஆயிரம்டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் ஆலைக்கு பதிவு செய்யப்படாத நிலையில், கரும்புபயிரிட்டுள்ள விவசாயிகளை அணுகி, அவர்களிடமிருந்து ஒப்பந்தமில்லா கரும்புகளும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கரும்பு அரவை
இந்த நிலையில் 2020 2021-ம்ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த மாதம் ஏப்ரல் 16ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அரவை தொடங்கப்பட்ட ஓரிரு நாட்கள் ஆலைக்குகரும்பு வந்து சேருவது தாமதமாகும். அதன்படி அரவை தொடங்கப்பட்ட பிறகு ஓரிரு நாட்கள் கரும்பு வரத்து குறைவாக இருந்ததால் 2 நாட்கள் கரும்பு அரவை நடைபெறவில்லை. அதன் பிறகு ஆலையில் கரும்பு அரவை தொடர்ந்தது.
இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1,250 டன் கரும்பு அரவைத்திறன் கொண்டது. இந்த ஆலைக்குத்தேவையான கரும்பை வெட்டுவதற்கு ஆலைப்பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள குமரலிங்கம், கணியூர் பகுதிகளில் கரும்பு வெட்டும் உள்ளூர் தொழிலாளர்கள் 100 பேர் மட்டுமே உள்ளனர். அதனால் கடந்த ஆண்டுகளை போன்று இந்த ஆண்டும் ஆலை களப்பணியாளர்கள் மூலம், வெளியூர்களில் இருந்து கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் வந்துள்ளனர். தர்மபுரி, சேலம் மாவட்டம் எடப்பாடி, கரூர் மாவட்டம் லாலாபேட்டை, கடலூர் மாவட்டம் பண்ருட்டி, தேனிமாவட்டம் பெரியகுளம் ஆகிய இடங்களில் இருந்து கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 1,000 பேர் குடும்பத்துடன் வந்துள்ளனர். இவர்கள் ஆங்காங்கு கரும்பு வெட்டும் வயல்களில் தங்கியிருந்து கரும்பு வெட்டி லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் ஆலைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இவர்கள் அந்த கரும்பு வயலில் கரும்பு வெட்டி முடியும் வரை தங்கியிருப்பார்கள். அந்த வயலில் கரும்பு வெட்டி முடிந்ததும், அடுத்தபடியாக கரும்பு வெட்டும் வயலுக்கு சென்று அங்கு தங்கியிருந்து கரும்பு வெட்டுவார்கள். அவர்கள் தங்குவதற்கான இடத்திற்கு அந்தந்த கரும்பு விவசாயிகள் ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கு, கரும்பு வெட்டுவதற்கு டன்னுக்கு இவ்வளவு வெட்டுக்கூலி என்று ஆலை நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது.
லாரிகள்
மேலும் வயல்களில் வெட்டி வைக்கப்படும் கரும்புகளை ஆலைக்கு கொண்டு வருவதற்கு 60க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளன. இந்த லாரிகள் பெரும்பாலும் வெளியூரை சேர்ந்த லாரிகள் ஆகும். இந்த நிலையில் இந்த சர்க்கரை ஆலையில் எந்திரங்கள் பழுது மற்றும் எரிபொருள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஆலையில் கரும்பு அரவை அடிக்கடி நிறுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் முன்பு இருந்த தொழில் நுட்பபயிற்சி பெற்ற தொழிலாளர்கள் ஓய்வுபெற்று விட்டனர். அந்த பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால் தற்போது ஆலை அரவையின் போது அந்த பணியிடங்களுக்காக வெளி மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும், தொழில்நுட்ப பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அயல்பணியாக அழைத்து வந்து ஆலையில், கரும்பு அரவைப்பணிகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த ஆலைத்தொழிலாளர்கள் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்ததைத்தொடர்ந்து, வேறு சர்க்கரை ஆலையில் இருந்து அயல்பணியாக வந்த தொழிலாளர்கள் தங்களது ஆலைக்கே திரும்பிச்சென்றுவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், மோகனூர் ஆகிய இடங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளில் பணியாற்றிவரும், தொழில் நுட்பபயிற்சி பெற்ற தொழிலாளர்கள் அயல்பணியாக இந்த ஆலைக்கு வந்துள்ளனர்.
எந்திரங்கள் அடிக்கடி பழுது
ஆலை எந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டதால் கடந்த 19ந்தேதி ஆலையில் கரும்பு அரவை குறைந்தது. 19ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 1,008 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. அதன்பிறகு 20ந் தேதி அரவை இல்லை. அதன்பிறகும் தினசரி கரும்பு அரவை குறைந்திருந்தது. 21-ம்தேதி காலை 6 மணிவரை 464 டன்னும், அடுத்த நாளிலான 22ம் தேதி காலை 6 மணிவரை 504 டன்னும் அரவை செய்யப்பட்டது. அதன்பிறகு 23ம்தேதி நள்ளிரவு வரை 280 டன் கரும்பு அரவை செய்யப்பட்டிருந்தது.
அதன் பின்னர் எந்திரங்களில் மீண்டும் பழுது ஏற்பட்டதால் அரவை நின்றது. ஆலையில் இந்த ஆண்டு அரவை தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 23 ந் தேதி அதிகாலை வரை மொத்தம் 20 ஆயிரத்து 902 டன் மட்டுமே கரும்பு அரவை செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு நேற்று காலை வரை கரும்பு அரவையில்லை.
அதனால் ஆலை அரவைக்கான கரும்பை கொண்டு வந்திருந்த லாரிகள் மற்றும் டிராக்டர்கள் ஆலைவளாகம் மற்றும் ஆலைக்கு எதிரே கரும்பு லாரிகள், டிராக்டர்கள் நிறுத்தும் வளாகம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் ஆலை வளாகத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி லாரிகள், டிராக்டர்கள் ஆகியவற்றில் 1,200 டன் கரும்பு தேக்கமடைந்திருந்தது.
டிரைவர்கள் அவதி
டிரைவர்கள் கரும்பு ஏற்றி வருவதற்கு வயல்களுக்கு செல்லும்போது வெளியிடங்களில் சாப்பிட்டுக்கொள்வார்கள். அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், தொடர்செயல்முறை தொழிற்சாலைகளுக்கும் பொது மற்றும் முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்த சர்க்கரை ஆலை தொடர் செயல்முறை தொழிற்சாலைக்கான அனுமதியின் பேரில் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் முழு ஊரடங்கினால் ஓட்டல்கள் இல்லாத நிலையில், கரும்பு ஏற்றிவந்த லாரிகள் மற்றும் டிராக்டர்களின் டிரைவர்கள், கிளீனர்கள் 100 பேர் முழு ஊரடங்கு நாட்களில்சாப்பாட்டிற்கு சிரமப்பட்டனர். அதனால் ஆலைநிர்வாகம் கடந்த 2 நாட்களாக ஆலைப்பகுதியில் உணவு தயாரித்து அவர்களுக்கு வழங்கியது.
ஆலையில் கரும்பு இறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் 3 நாட்களாக லாரிகளை ஓட்டமுடியாமல், அதற்குரிய வாடகையும் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
வயல்களில் கரும்பு தேக்கம்
ஆலை எந்திரங்களில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு அரவை தொடர்ந்து நடக்கும் என்று எதிர்பார்த்து கரும்பு வயல்களில் வெட்டி வைக்கப்பட்டுள்ள 1,000 டன் கரும்பு, கரும்பு வயல்களில் தேக்கமடைந்தது.
கரும்பு அரவை செய்யப்படுவதில் தாமதமேற்பட்டு கரும்பு காயும் பட்சத்தில், கரும்பின் எடையும், கரும்பில் இருந்து கிடைக்கக்கூடிய சர்க்கரை கட்டுமானமும் குறையக்கூடும்.
தொழிலாளர்கள்
அத்துடன் கரும்பு வயல்களில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 1,000 பேர் பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு கரும்பு வெட்டினால்தான் அதற்கான கூலிகிடைக்கும்.
ஆலையில் அரவை நிறுத்தப்பட்டிருக்கும் சமயங்களில் கரும்பு வெட்டு நிறுத்தப்படுவதன் மூலம் அவர்கள் அந்த நாட்களுக்குரிய வருமானம் இல்லாமல் சாப்பாட்டிற்கு கையிருப்பு தொகையில் இருந்து செலவு செய்யவேண்டியுள்ளது.
ஆலையில் எந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்து, அடிக்கடி கரும்பு அரவை நிறுத்தப்படுவதால் லாரி, டிராக்டர் டிரைவர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகள் ஆகியோர் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
இதுபோன்ற நிலைகள் ஏற்படாத வகையில் ஆலை நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அரவை மீண்டும் தொடக்கம்
இந்த நிலையில் ஆலை எந்திரங்களில் பழுதுசரிசெய்யப்பட்டு நேற்று காலை 9 மணிக்கு மீண்டும் கரும்பு அரவை தொடங்கியது. மாலை 5 மணிவரை 460 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. இது ஆலையின் முழு கரும்புஅரவைத்திறனுக்கான சராசரி அரவையாகும். எந்திரங்களில் பழுது சரிசெய்யப்பட்டு, அரவை மீண்டும் தொடங்கியதைத்தொடர்ந்து லாரிகள் மற்றும் டிராக்டர்கள் ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த வரிசைப்படி, ஆலை வளாகத்திற்குள் சென்றன. அங்கு கரும்பு இறக்கப்பட்டதும், அந்த லாரி மற்றும் டிராக்டர்கள், அடுத்த லோடு எடுத்து வருவதற்காக கரும்பு வயல்களுக்கு சென்று வந்தன.
Related Tags :
Next Story