பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 6 பேர் கைது 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு மது பாட்டில்களை கார் மற்றும் மோட்டார் ைசக்கிள்களில் கடத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், முத்துசாமி ஏட்டு யோக ரவி மற்றும் போலீசார் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு மது பாட்டில்கள் மற்றும் மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அய்யப்பன் (வயது 25), சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த கவுதம் (27), தர்மபுரி மாவட்டம் ரேகடஅள்ளியை சேர்ந்த பரமசிவம் (35), வெங்கடாசலம் (35), பிரபாகரன் (27), விஜயன் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, ரூ.42 ஆயிரம் மதிப்பிலான 548 மதுபாட்டில்கள் மற்றும் மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story