பொதுமக்கள் நலன்கருதி மாவட்டத்தில், ரேஷன் கடைகள் திறப்பு சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கி சென்றனர்
பொதுமக்கள் நலன் கருதி நேற்று மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
கடலூர்,
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற 31-ந்தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
அதேபோல் ரேஷன் கடைகளும் நேற்று முன்தினம் முதல் அடைக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் என்றும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
1,420 ரேஷன் கடைகள்
அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்திலுள்ள 1,420 ரேஷன் கடைகளும் பொதுமக்கள் நலன்கருதி திறக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் முக கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை கடைபிடித்த படி வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.
கடலூர் மஞ்சக்குப்பம், பீச் ரோடு சரவணபவ கூட்டுறவு அங்காடி, திருப்பாதிரிபுலியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்கி சென்றனர்.
இருப்பினும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் கூட்டம் இல்லை. சிலர் மட்டும் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். இதேபோல் பால், மருந்து கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள் போன்றவை வழக்கம் போல் திறக்கப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story