கிருஷ்ணகிரியை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக்க நடவடிக்கை அமைச்சர் காந்தி பேட்டி


கிருஷ்ணகிரியை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக்க நடவடிக்கை அமைச்சர் காந்தி பேட்டி
x
தினத்தந்தி 25 May 2021 11:09 PM IST (Updated: 25 May 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் காந்தி கூறினார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் காந்தி கூறினார்.
2-வது நாளாக ஆய்வு
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அவர் நேற்று 2-வது நாளாக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைகள், பர்கூர் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் காமன்தொட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
படுக்கை வசதிகள்
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 512 படுக்கைகளில் 360 படுக்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு தலைமை மருத்துவமனையில் 108 டாக்டர்கள், 190 செவிலியர்கள், 75 உதவியாளர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது 349 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சூளகிரி காமன்தொட்டியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு 30 படுக்கைகள், பிற பெண்களுக்கு 5 படுக்கைகள் என 35 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் 275 படுக்கைகள் உள்ளன. அதில் 140 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. இதே போல பட்டு வளர்ச்சி துறை பயிற்சி மையத்தில் 80 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மையம் உள்ளன.
கொரோனா இல்லாத மாவட்டம்
தேன்கனிக்கோட்டையில் 84 ஆக்சிஜன் படுக்கைகளும், 29 ஆக்சிஜன் அற்ற படுக்கைகளும் உள்ளன. காவேரிப்பட்டணத்தில் 30 படுக்கைகள் உள்ளன. பர்கூர் மையத்தில் 350 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஏதுவாக 50 படுக்கையுடன் சித்தா சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரத்து 712 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு 3 லட்சத்து 21 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இதுவரை 28 ஆயிரத்து 882 பேர் பாதிக்கப்பட்டு 20 ஆயிரத்து 325 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 8 ஆயிரத்து 376 பேர் சிகிச்சையில் உள்ளனர். விரைவில் கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்), கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story