குடியாத்தம் அருகே; விளை நிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்


குடியாத்தம் அருகே; விளை நிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 25 May 2021 11:17 PM IST (Updated: 25 May 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.

குடியாத்தம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் பல குழுக்களாக பிரிந்து தமிழக வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. 

இக்கூட்டத்தில் இருந்து பிரிந்த இரண்டு ஒற்றை யானைகள் அடிக்கடி குடியாத்தத்தை அடுத்த கதிர்குளம், டி.பி.பாளையம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. 

இரவு நேரங்களில் மட்டுமே சுற்றித்திரிந்த ஒற்றை யானை நேற்று காலை 8 மணி அளவில் கதிர்குளம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதைக்கண்ட விவசாயிகள் யானையை சத்தம் போட்டு விரட்ட முயற்சித்தனர்.

அப்போது யானை, விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் விரட்டி வந்தது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் விளை நிலங்களுக்குள் ஒட்டியபடி உள்ள தங்களின் வீடுகளுக்குள் சென்று பாதுகாப்பாக இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனவர் முருகன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர். 

Next Story