கொரோனா தடுப்பூசி போட கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும்
தடுப்பூசி போட ஒரே இடத்தில் பலர் திரண்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால் கொரோனா தடுப்பூசி போட கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
தடுப்பூசி போட ஒரே இடத்தில் பலர் திரண்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால் கொரோனா தடுப்பூசி போட கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிறப்பு முகாம்
கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் தடுப்பூசி போட பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி முதல் பொள்ளாச்சியில் சிறப்பு முகாம் நடத்தி 18 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக தொழிலாளர்கள் மற்றும் சேவை துறையில் பணிபுரியும் நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் 4-வது நாளாக பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
3,023 பேருக்கு தடுப்பூசி
இந்த முகாமுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட வந்தனர். அவர் கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
பின்னர் அவர்கள் குறித்த விவரங்களை தன்னார்வலர்கள் இணையதளத்தில் பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த முகாமில் மட்டும் 3,023 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
நாச்சிமுத்து பிரசவ விடுதியில் இருந்து ஆண்கள் வரிசை பஸ் நிலையம் தாண்டி, சப்-கலெக்டர் அலுவலகம் வரையும், பெண்கள் வரிசை வெங்கடேசா காலனி மதுவிலக்கு போலீஸ் நிலையம் தாண்டி குடிநீர் நீரேற்று நிலையம் வரை நின்றது.
தொற்று பரவும் அபாயம்
போலீசார் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தடுப்பூசி போடுவதற்கு வந்தவர்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தடுப்பூசி போடுவதற்கு வந்தவர்கள் சமூக இடைவெளியை மறந்து நெருக்கமாக வரிசையில் நின்றனர். தடுப்பூசி போட ஒரே இடத்தில் பலர் திரண்டதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கூடுதல் மையங்கள்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு ஒரே ஒரு கொரோனா தடுப்பூசி மையம் தான் உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவதால் கூட்டம் அதிகமாகிறது.
அவர்கள் சமூக இடைவெளியை கடைப் பிடிக்காமல் நெருக்கமாக இருப்பதால் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கூடுதலாக தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story