கொரோனா சிகிச்சை வார்டு, படுக்கைகளில் உள்ள கிருமிகளை அழிக்கும் புதிய உபகரணம் உருவாக்கி அசத்திய வாலிபர்


கொரோனா சிகிச்சை வார்டு, படுக்கைகளில் உள்ள கிருமிகளை அழிக்கும் புதிய உபகரணம் உருவாக்கி அசத்திய வாலிபர்
x
தினத்தந்தி 25 May 2021 6:20 PM GMT (Updated: 25 May 2021 6:20 PM GMT)

கொரோனா சிகிச்சை வார்டு மற்றும் படுக்கைகளில் உள்ள கிருமிகளை அழிக்கும் புதிய உபகரணத்தை வாலிபர் உருவாக்கி உள்ளார்.

கீரமங்கலம்
கிராமத்து மாணவர்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம் மகன் சிவசந்தோஷ் (வயது 18) இவர், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 2018-ல் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார். பின்னர் புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கட்ரானிக்ஸ்) இறுதி ஆண்டு படித்து முடித்துள்ளார்.
சிறு வயதிலேயே ஆராய்ச்சி
சிவசந்தோஷ் ஆராய்ச்சி துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பழைய எலக்ட்ரானிக் பொருட்களை சேகரித்து பல கருவிகளை வடிவமைத்து இயங்க செய்துள்ளார். தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கச் சென்ற பிறகு கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் சக நண்பர் சீனிவாசனுடன் இணைந்து நண்பர்கள் பார்த்திபன், சரவணன் ஆகியோரின் பொருளாதார உதவியுடன் யு.வி லைட் மூலம் கொரோனா உள்ளிட்ட கிருமிகளை அழித்தல் கருவியை செய்து இணையம் மூலம் வெளியிட்டதைப் பார்த்து வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அந்தக் கருவியை வாங்கிச் சென்றுள்ளது. அதே போல தானியங்கி முறையில் தயாரிக்கப்பட்டு செல்போன் மூலம் இயக்கக்கூடிய கருவியில் உடல் வெப்பத்தை பரிசோதித்து கையை நீட்டினால் கிருமிநாசினி தெளிக்கும் உபகரணத்தையும் செய்து ஒரு திருமண வீட்டில் வைத்து சோதித்து வெற்றி கண்டுள்ளார்.
ஐ.ஐ.டி.யில் வேலை
மேலும், தண்ணீர் வீணாகாமல் சோளார் மூலம் சொட்டு நீர் பாசனத்தை முறைப்படுத்தும் கருவியும் செய்து பாராட்டுப் பெற்றுள்ளார். வளிமண்டலத்தில் நிலவும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை கணக்கிட்டு விண்வெளியில் பயிர் சாகுபடி செய்வது குறித்த தொடர் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
சூரிய ஒளியில் இருந்து நேரடியாக தண்ணீரை சூடுபடுத்துதல் போன்ற கருவியை வடிவமைத்துள்ளார். இதை அறிந்த சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் இவரைப் பாராட்டியதோடு பணிபுரியவும் வாய்ப்பு கொடுத்துள்ளது. 
கொரோனா வார்டில் கிருமிகளை அழிக்கும் உபகரணம்
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் காற்றில் பறக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை காற்றோடு இழுத்து அழிக்கும் ஒரு கருவியையும், கொரோனா நோயாளிகள் படுத்திருந்த படுக்கைகள் மற்றும் ஆம்புலன்ஸ்களில் உள்ள படுக்கைகளில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தம் செய்யும் யு.வி. லைட் கருவியையும் வடிவமைத்துள்ளார். இது குறித்து சிவசந்தோஷ் கூறுகையில், கொரோனா வார்டுகளில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள் தும்மல், இருமல் மூலம் வெளியேறி மற்றவர்களுக்கு பரவும் கிருமிகளை காற்றோடு சேர்ந்து இழுத்து உள்வாங்கி கிருமியை அழித்துவிட்டு காற்றை வெளியேற்றும் உபகரணம் வடிவமைத்திருக்கிறேன். ஏ.சி. மெஷின் போல ஒவ்வொரு அறையிலும் பொறுத்திவிட்டால் அந்த அறைகளில் உள்ள கிருமிகளை அழித்துவிடும். அதனால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். அதே போல யு.வி. லைட் மூலமே நோயாளிகளின் படுக்கைகளில் உள்ள கிருமிகளையும் ஆம்புலன்ஸ் படுக்கைளில் உள்ள கிருமிகளையும் அழித்து சுத்தம் செய்யும் உபகரணம் ஒன்றும் வடிவமைத்திருக்கிறேன் என்றார். கிராமத்து வாலிபர் தொடர்ந்து ஆய்வுகளில் சாதித்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Next Story