ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்; அமைச்சர் மதிவேந்தன் தகவல்
ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
ராசிபுரம்:
அமைச்சர் ஆய்வு
ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ராசிபுரத்தில் உள்ள தேசிய பெண்கள் பள்ளியில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியையும், சிங்களாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியையும் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது மாவட்ட கலெக்டர் மெகராஜ் மற்றும் டாக்டர்களிடம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆக்சிஜன் உற்பத்தி மையம்
தமிழக முதல்-அமைச்சர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) 500-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இன்னும் சில நாட்களின் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் தேவையான அளவு உள்ளது. மேலும் மாவட்டத்தில கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்பட உள்ளனர். இங்குதொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. சிகிச்சை அளிப்பதற்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் கொள்முதல் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா தலங்கள்
தற்போது கொரோனா காலம் என்பதால் சுற்றுலாத்துறைக்கு என்று தனியாக திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசு சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டவுடன் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம், ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் குணசீலன், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் வக்கீல் செல்வம், வெண்ணந்தூர் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.எம்.துரைசாமி, முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.கே.பாலச்சந்திரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு, குருக்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ் பாபு, ராசிபுரம் ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ரவி என்கிற முத்துச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர் அருள், பேரூர் செயலாளர்கள் ராஜேஷ், சுப்பிரமணியம், வக்கீல்கள் பன்னீர்செல்வம், சரவணன், ராசிபுரம் நகர இளைஞரணி செயலாளர் கார்த்தி, குருசாமிபாளையம் தியாகராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story