நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் நாளில் 6,683 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
நாமக்கல்:
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 44 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் நாளான நேற்று அரசு அறிவித்தபடி கொரோனா தொற்று எளிதில் ஏற்படக்கூடிய தொழிலாளர்கள், செய்தித்தாள்களை போடுபவர்கள், பால் விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், தெருக்களில் விற்பனை செய்பவர்கள், மருந்தகங்கள், மளிகை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், மின்வாரிய ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், மின் வணிகம், கட்டுமான தொழிலாளர்கள், அனைத்து மாநில போக்குவரத்து ஊழியர்கள், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
6,683 பேருக்கு தடுப்பூசி
நாமக்கல் நகராட்சியில் இதற்கான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினர் உள்பட ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்டனர்.இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 44 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு 59 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு முதல் கட்டமாக 24 ஆயிரத்து 800 டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு செய்து உள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 6,683 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story