நெல்லையில் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு
நெல்லையில் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லையில் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த தீவிர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இந்த ஊரடங்கு தொடங்கிய நிலையில் நேற்று 2-வது நாளாக அமல்படுத்தப்பட்டது.
இதையொட்டி நெல்லை மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவசர தேவையின்றி பிற மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். இதே போல் நெல்லை மாநகர எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் தற்காலிக சோதனை சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். வண்ணார்பேட்டை, சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் அவசர ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி, மற்றொரு பகுதியில் பொதுமக்கள் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டிரோன் மூலம்
இந்த நிலையில் பொது மக்களின் நடமாட்டம், வாகன போக்குவரத்தை கண்காணிக்க போலீசார் நேற்று பறக்கும் கேமரா எனப்படும் ‘‘டிரோன்’’ பயன்படுத்தினர். வண்ணார்பேட்டையில் இந்த பணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது, டவுன் உதவி கமிஷனர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
டிரோனை பல்வேறு இடங்களில் பறக்க விட்டு போலீசார் கண்காணித்தனர். மேலும் அதில் பதிவாகி இருந்த காட்சிகளை கண்காணித்து, ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்தனர்.
பேட்டி
பின்னர் துணை கமிஷனர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகரில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பொருட்டு 23 இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் ‘டிரோன் கேமரா’ மூலம் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
அத்தியாவசிய தேவையின்றி வருகிற வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, பறிமுதலும் செய்யப்படுகிறது. முக்கிய ரோடுகள் தவிர, தெருக்களிலும் கண்காணிக்கப்படும். தொடர்ச்சியாக விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
பொது மக்கள் அனைவரும் ஊரடங்கை உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா குறித்து அலட்சியம் காட்டக்கூடாது. ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story