கொரோனா முழு ஊரடங்கால் திருச்சி முருகன் கோவில்களில் களை இழந்த வைகாசி திருவிழா
கொரோனா முழு ஊரடங்கால் திருச்சி முருகன் கோவில்களில் வைகாசி திருவிழா களை இழந்தது.
திருச்சி,
வைகாசி விசாகம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதத்தில் வரும். முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், செல்வம், புகழ் அடைவார்கள் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு வைகாசி விசாகம் நேற்று நடந்தது. விசாக திருநாளில் முருகனை வழிபடுவது சிறந்தது.
திருச்சி அருகே உள்ள குமார வயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா அன்று, ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வார்கள். ஆனால், தற்போது கொரோனா முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டு உள்ளன. பக்தர்கள், பொதுமக்கள் என யாரும் வெளியில் செல்லவும் கூடாது என்ற கட்டுப்பாடு வேறு. கோவில்களில் விழா கொண்டாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வயலூர் கோவிலில் நேற்று வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன. கோவில் நடை சாத்தப்பட்டு இருந்ததால் அருகில் வசிக்கும் பக்தர்கள் சிலர் மட்டுமே கோவிலுக்கு வந்தனர். அவர்கள் வெளியில் நின்றும், அருகில் உள்ள கருப்பு கோவிலில் கற்பூரம் ஏற்றியும் சாமி கும்பிட்டு விட்டு சென்றனர். திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவில் உள்பட திருச்சி நகரில் உள்ள பல முருகன் கோவில்களும் மூடப்பட்டு இருந்ததால் நேற்று வைகாசி விழா கொண்டாட்டத்திற்கான அறிகுறி இன்றி கோவில்கள் களை இழந்து காணப்பட்டன.
Related Tags :
Next Story