குமரியில் 22 தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை
குமரியில் 22 தனியார் ஆஸ்பத்திரிகளில் முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
நாகர்கோவில்:
குமரியில் 22 தனியார் ஆஸ்பத்திரிகளில் முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அச்சப்பட தேவையில்லை
குமரி மாவட்டத்திற்கு வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரியில் மாவட்ட கலெக்டரின் சீரிய தலைமையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் அரசின் சார்பில் 1,100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இருக்கிறது. மேலும் 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை தயார் செய்வதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் மேற்கொண்டு வருகிறார். ஒரு மாத காலத்தில் 150 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
அரசு பொது மருத்துவமனையில் புதிய கட்டிட கட்டுமான பணிகள் நடக்கிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் அதிலும் 600 படுக்கைகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதி இல்லை என்ற நிலை நிச்சயம் மாற்றப்பட இருக்கிறது.
காப்பீட்டு திட்டம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தனியார் மருத்துவமனைகளிலும் முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின் கீழ் அரசாணை வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 22 தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம். அந்த மருத்துவமனைகளை மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் ‘இந்த மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது’ என்ற விவரத்தை விளம்பரமாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் இணைவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்ற விவரத்தையும் பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்த மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான பணிகளும் இந்த மாவட்டத்தில் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.
அன்பும் ஆதரவும்
கொரோனா பரவி வரும் நிலையில் டாக்டர்கள் தங்களது உயிரை துச்சமென மதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். எல்லா மருத்துவர்களும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை உதாசீனபடுத்துவார்கள் என்று நாங்கள் கருதவில்லை. எங்காவது ஒன்றிரண்டு டாக்டர்கள் அவ்வாறு தவறு செய்வார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பாக பேசுவது தான் சிகிச்சைகளில் முதன்மையான சிகிச்சை. அன்பும் ஆதரவும்தான் இந்த மருத்துவத்துக்கான முதல் தேவையே. தேவைப்பட்டால் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கவுன்சிலிங் போன்றவற்றை வழங்கவும் மாவட்ட கலெக்டருக்கு தெரிவித்துள்ளோம். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 3,700 மருத்துவ பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளார். அந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கான முயற்சிகளையும் கலெக்டர் மேற்கொள்வார்.
தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கையின் பேரில் அனைத்து மருத்துவமனைகளிலும் உதவி மையம் (மே ஐ ஹெல்ப் யூ என்ற டெஸ்க்) உருவாக்கப்பட்டு வருகி றது. உங்களது குற்றச்சாட்டுக்கு தீர்வு காணும் வகையில் நாகர்கோவிலில் உள்ள பொது மருத்துவமனையிலும் ‘மே ஐ ஹெல்ப் யூ டெஸ்க’் உருவாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியின் நோய் தன்மையை அவருடைய உறவினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தடுப்பூசி
தடுப்பூசியை பொறுத்தவரையில் மலைகிராம மக்கள், கிராமங்களை சேர்ந்தவர்கள், நகர மக்கள் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடப்படும்.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 12 லட்சத்து 85 ஆயிரம் பேர் உள்ளனர். ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று பணியாற்ற கூடியவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுவது என முடிவெடுத்து அதன்படி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்திற்கு முப்பதாயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்த முப்பதாயிரம் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
தன்னார்வலர்கள்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு உதவி செய்வது , உணவு வழங்குவது உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்திற்கு வருகிற தன்னார்வலர்களை நிச்சயம் ஊக்கப்படுத்துவோம். மாவட்ட கலெக்டரும் தன்னார்வலர்களை அழைத்து பேசி வருகிறார். யார்- யார் இந்த பணியில் ஈடுபாட்டோடு பணியாற்றுவார்களோ அவர்களை ஈடுபடுத்தி இருக்கிறோம்.
கொரோனா தடுப்பூசியை உலகளாவிய ஒப்பந்தத்தின் மூலம் பெற இருக்கிறோம். இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. அரை மணி நேரத்துக்கு முன்பு தான் அந்த தகவல் வந்தது. அதாவது செங்கல்பட்டில் இண்டகிரேட்டட் வேக்சின் சென்டர் என்ற மையம் கட்டப்பட்டு, பெரிய அளவிலான பணிகள் முடிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தை இன்று (அதாவது நேற்று) மாலை முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
எப்படியாவது இந்த நிறுவனத்தை நாம் எடுத்து நடத்தினால் நாமே மருந்து தயாரிக்கலாம் என்ற நிலை உருவாக்கப்படும். இங்கு இந்த ஆய்வுக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதுதான் அவர் இதைத் தெரிவித்தார். எப்படியாவது இந்த நிறுவனத்தை எடுத்து நடத்த மத்திய அமைச்சகத்திடமும், பிரதமரிடமும் பேசி நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இது மிக மகிழ்ச்சியான செய்தி. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் தமிழகத்தில் தயாரிக்கிற ஊசி மருந்தை மற்ற மாநிலங்கள் எல்லாம் வாங்கி செல்லக் கூடிய நிலை வரும். அதற்கான முயற்சிகளில் முதல்-அமைச்சர் ஈடுபட்டிருக்கிறார். தமிழகத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Related Tags :
Next Story