மதுரையில் நேற்று 1358 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று புதிதாக 1358 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது
மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 1358 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது. கடந்த ஆண்டு இருந்ததைவிட இந்த ஆண்டு பாதிப்பும், உயிரிழப்பும் கடுமையாக அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றும் தமிழகத்தில் புதிதாக 34 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களை போல மதுரையிலும் நாளுக்குநாள் பாதிப்பு ஏறுமுகமாகவே இருக்கிறது. அந்தவகையில் நேற்று மேலும் 1358 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 955 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.
மதுரையில் இதுவரை 58 ஆயிரத்து 536 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 927 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 43 ஆயிரத்து 679 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 34ஆக உயர்ந்துள்ளது.
10 பேர் சாவு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 468 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
மதுரையில் நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், 3 பேர் ரெயில்வே ஆஸ்பத்திரியிலும், 3 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றவர்கள். அவர்கள் 42, 52, 50 வயது ஆண்கள், 75,71,65 வயது முதியவர்கள், 56 வயது பெண், 63,62,72 வயது மூதாட்டிகள் என 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததுடன் வேறு சில இணை நோய்களும் இருந்ததால் இவர்கள் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story