நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விளைநிலங்களை தயார் செய்யும் பணி
தஞ்சை அருகே வயல்களில் நாட்டு மாடுகளை மேய விட்டு விளை நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அதிக மகசூல் கிடைக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை அருகே வயல்களில் நாட்டு மாடுகளை மேய விட்டு விளை நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அதிக மகசூல் கிடைக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
குறுவை சாகுபடி
தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஆண்டு குறுவை சாகுபடியில் அதிக அளவு சாகுபடி செய்து கொரோனா காலகட்டத்தில் விவசாயிகள் சாதனை படைத்தனர். இதனால் நெல் கொள்முதல் அதிக அளவில் நடைபெற்றது.
அதன் பின்னர் சம்பா, தாளடி பயிர்கள் அதிக அளவு சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் டெல்டா மாவட்டத்தில் ஜனவரி மாதம் பருவம் தவறி தொடர்ந்து பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் விவசாயிகள் மனம் தளராமல் மின் மோட்டார் உள்ள விவசாயிகள் கோடை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளியூர் நாட்டு மாடுகள்
தற்போது அடுத்த மாதம் (ஜுன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை அருகே வயலூர் பகுதிகளில் வயல்களில் அரியலூர் மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாட்டு மாடுகளை வயல்களில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.
இதற்காக மாடுகளை அழைத்து வருபவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விவசாயிகள் தங்களது வயலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாடுகளை கிடை போடும் படி கூறுவர். அதன்படி பகலில் அருகில் இடங்களுக்கு சென்று மேய்ந்து விட்டு மாலை முதல் காலை வரை வயதிலேயே மாடுகளை கிடை அமைத்து தங்க வைப்பார்கள். மாட்டு சாணம் மற்றும் சிறுநீர் மூலம் மண் வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மண்வளம் பாதிக்கப்படாது
இதுகுறித்து நாட்டு மாடு வளர்ப்பவர் கூறும்போது, "ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதால் நாங்கள் எங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இருந்து நாட்டு மாடுகளை விவசாய பணி மேய்ச்சலுக்காக இங்கு கொண்டு வந்துள்ளோம். இதனால் விளைநிலங்கள் இயற்கை முறையில் இருக்கும். நாட்டு மாடுகள், எருதுகளை வயல்களில் விடுவதால் இயற்கை வளங்கள் காப்பாற்றப்படும். நல்ல மகசூல் கிடைக்கும். வயல்கள் நல்ல முறையில் இருக்கும்"என்றனர்.
விவசாயிகள் கூறும்போது, "கடந்த சில ஆண்டுகளாக விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக வேலையாட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. எந்திரம் மூலம் பல விவசாயிகள் நடவு மற்றும் அறுவடைகளை செய்வதால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. பழைய காலங்களில் நாட்டு மாடுகளை பயன்படுத்தி விவசாயம் செய்தோம். அப்போது விளைநிலங்கள் மண் பாதிப்படையாமல் இருந்தது.
அதிக மகசூல் கிடைக்கும்
எந்திரங்கள் பயன்பாட்டால் விலை நிலங்களின் மண் பாதிப்படைந்துள்ளது. தற்போது நாட்டு மாடுகளை பயன்படுத்தி இயற்கை முறையில் விளைநிலங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் இயற்கை முறையில் விளைநிலங்களை நல்ல முறையில் மீட்டெடுக்க முடியும். பின்பு வரும் சந்ததிகளுக்கும் விளைநிலங்கள் இயற்கை பாரம்பரிய முறைப்படி நல்ல முறையில் இருக்கும். பல ஆண்டுகளுக்கு விளைநிலங்கள் நல்ல முறையில் இருக்கும். மகசூலும் அதிகப்படியான விளைச்சல் இருக்கும்"என்றனர்.
Related Tags :
Next Story