ஈரோட்டில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன


ஈரோட்டில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன
x
தினத்தந்தி 25 May 2021 9:34 PM GMT (Updated: 25 May 2021 9:34 PM GMT)

ஈரோட்டில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.

ஈரோடு
ஈரோட்டில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.
ரேஷன் கடைகள் திறப்பு
தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. ஊரடங்கின்போது ரேஷன் கடைகள் திறக்காது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளின் பேரில் நேற்று முதல் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.
ஈரோட்டில் நேற்று வழக்கம்போல காலை 8 மணிக்கு ரேஷன் கடைகள் திறந்து மதியம் 12 மணிவரை இயங்கின. அப்போது ரேஷன் பொருட்கள் வாங்கவும், நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வாங்கவும் ஏராளமானவர்கள் கடைகளில் குவிந்தனர். கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தினார்கள். ஈரோடு சூளை பகுதியில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். இதுபோல் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து காத்து இருந்தனர்.
தரமான அரிசி
இதுபற்றி சமூக ஆர்வலர் எம்.ராஜேஷ் கூறும்போது, “பொதுமக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் பணியில் முக்கிய இடம் பிடிப்பது ரேஷன் கடைகள். எனவே ரேஷன் கடைகளை மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். அதுபோல் ரேஷன் கடை ஊழியர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். தரமான அரிசியை ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட வேண்டும். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரேஷன் பொருட்கள் ஒவ்வொரு அட்டைக்கும் பொருட்கள் வழங்கும் தேதி மற்றும் நேரத்தை செல்போன்கள் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பி, அந்த நேரத்தில் வர செய்யலாம். 
இந்த நடைமுறையில் அட்டைதாரர்களை பிரித்து நேரம் கொடுத்து பொருட்கள் வழங்கிவிடலாம். விடுபட்டவர்கள் இருந்தால் அடுத்த 15 நாட்களில் பொருட்கள் வாங்கிக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இதனால் ஒரே நேரத்தில் பொதுமக்கள் வந்து குவியும் நிலை மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story