கோபி அருகே மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்: கயிற்றால் இறுக்கி சலூன் கடை உரிமையாளர் கொலை- மனைவி உள்பட 3 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்


கோபி அருகே மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்: கயிற்றால் இறுக்கி சலூன் கடை உரிமையாளர் கொலை- மனைவி உள்பட 3 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்
x

கோபி அருகே சலூன்கடை உரிமையாளர் மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கயிற்றால் இறுக்கி் அவரை கொலை செய்ததாக மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தூர்
கோபி அருகே சலூன்கடை உரிமையாளர் மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கயிற்றால் இறுக்கி் அவரை கொலை செய்ததாக மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சலூன் கடை உரிமையாளர்
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் டெலிபோன் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). இவர் கோபியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி பிரபா (36). இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும் உள்ளார். 
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி காலையில் பிரபாவும், அவருடைய மகளும் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர். பொருட்களை வாங்கிவிட்டு வந்து பார்த்தபோது வீட்டில் சீனிவாசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 
கொலை வழக்காக மாற்றம்
இதுபற்றி அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சீனிவாசனின் சாவை ‘மர்ம சாவு’ என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இதற்கிடையே சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனை முடிவு வந்தது. அதில் சீனிவாசன் கொலை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் சீனிவாசனின் மர்ம சாவு வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து கோபி போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். 
பரபரப்பு தகவல்கள்
இதனிடையே சீனிவாசனின் மனைவி பிரபா நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் பிரபாவிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சீனிவாசனை கொலை செய்ததை பிரபா ஒத்துக்கொண்டார். 
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
பிரபாவின் நடவடிக்கையில் சீனிவாசனுக்கு சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பிரபாவிடம் சீனிவாசன்  அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தெரிகிறது. இதன்காரணமாக சீனிவாசன் மீது பிரபாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. 
இதனால் சீனிவாசனை கொலை செய்ய பிரபா திட்டமிட்டார். இதற்காக பிரபா தன்னுடைய உறவினரான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த சலூன் கடை உரிமையாளரான வெள்ளியங்கிரி (40) என்பவரின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது. 
கயிற்றால் இறுக்கி கொலை
இதைத்தொடர்ந்து கடந்த 21-ந் தேதி இரவு சீனிவாசன் தூங்குவதற்கு முன்பு பாலில் தூக்க மாத்திரையை பிரபா கலந்து கொடுத்தார். இதில் சீனிவாசன்  மயக்கமடைந்தார். இதையடுத்து பிரபாவின் திட்டப்படி வெள்ளியங்கிரி (40), அவருடைய நண்பரான ஓட்டல் தொழிலாளி சரவணன் (30) ஆகியோர் சீனிவாசனின் வீட்டுக்கு வந்து உள்ளனர். பின்னர் சீனிவாசன் கழுத்தை கயிற்றால் இறுக்கி வெள்ளியங்கிரி, சரவணன் ஆகியோர் கொலை செய்து உள்ளனர். அப்போது கொலைக்கு உடந்தையாக சீனிவாசனின் கால்களை பிரபா பிடித்து உள்ளார். 
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து பிரபாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் பிரபா கொடுத்த தகவலின் பேரில் வெள்ளியங்கிரி, சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Related Tags :
Next Story