கொரோனா களப்பணியில் ஆசிரியர்கள் கலெக்டர்களின் உத்தரவுக்கு சங்கங்கள் எதிர்ப்பு


கொரோனா களப்பணியில் ஆசிரியர்கள் கலெக்டர்களின் உத்தரவுக்கு சங்கங்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 May 2021 3:07 AM IST (Updated: 26 May 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா களப்பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கலெக்டர்கள் அறிவித்து உள்ள உத்தரவுக்கு ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஈரோடு
கொரோனா களப்பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கலெக்டர்கள் அறிவித்து உள்ள உத்தரவுக்கு ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
 உத்தரவு
கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து துணை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பணிகளை நிறைவேற்ற கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 135 பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர், போலீஸ், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர் மற்றும் அந்த பகுதி பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் கொண்ட குழு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா தொற்று
இதுபோல் மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று கொரோனா நோயாளிகள் அல்லது காய்ச்சல் பாதிப்பு உடையவர்களை கண்டறியும் பணியிலும் பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகளை ஈடுபடுத்தி ஏற்கனவே களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா தொற்றின் 2-வது அலையில் தற்போது வரை சுமார் 500 ஆசிரிய-ஆசிரியைகள் உயிரிழந்து உள்ளனர். சட்டமன்ற பொதுத்தேர்தலில் மட்டுமின்றி தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வழங்கும் பணி, வாக்கு எண்ணிக்கை பணி ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இதனால் பெருந்தொற்றுக்கு உள்ளாகி, அரசு ஆஸ்பத்திரிகளில் இடமில்லாமல், தனியார் ஆஸ்பத்திரிகளில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியாமலும் பல லட்சம் ரூபாய் செலவழித்து பலர் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்து உள்ளனர்.
உயிரிழப்பு
இந்தநிலையில் திருப்பூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் மருத்துவம் சாராத பணிகளுக்கு ஆசிரிய-ஆசிரியைகளை பயன்படுத்த உத்தரவிட்டு உள்ளனர். ஆசிரியர்கள் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்படாத நிலையிலும், முன்களப்பணியாளர்களைப்போன்று ஆசிரியர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக கொரோனா தொற்று அதிகம் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆசிரியர்கள் பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கலெக்டரின் உத்தரவின்படி பணி உத்தரவு வழங்கப்பட்ட அனைத்து ஆசிரிய-ஆசிரியைகளும் இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா பரவலால் ஏற்பட்டு உள்ள தற்போதைய நிலை ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் தெரியும். அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆசிரிய-ஆசிரியைகள் முழு ஒத்துழைப்பு தரும் அதேநேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை உயிரிழந்த டாக்டர்கள், செவிலியர், போலீசாருக்கு இணையாக உள்ளது.
தன்னார்வலர்
பெரும்பாலான ஆசிரியர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு இணை நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர்கள் வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறி இருப்பவர்களின் பட்டியலை சேகரிக்க செல்வதால் பலருக்கும் கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது. ஆசிரியர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரும் இதனால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே களப்பணி தவிர்த்து, கொரோனா நோயாளிகளுக்கு ஆற்றுப்படுத்தும் ஆலோசனைகள் வழங்கும் பணிகளை கட்டுப்பாட்டு அறைகள் அல்லது வீடுகளில் இருந்து தொலைபேசி மூலம் பேசும் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். களப்பணி வழங்கப்பட்டாலும் 50 வயதுக்கு உள்பட்ட தன்னார்வலராக பணி செய்ய ஆர்வம் உள்ள ஆசிரிய-ஆசிரியைகளை இந்த பணிக்கு தேர்ந்து எடுக்கவும் வேண்டும். தன்னார்வலர்களாக களப்பணியாற்றும் ஆசிரிய-ஆசிரியைகளை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
எதிர்ப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் கொரோனா களப்பணிக்கு ஆசிரியர்கள் பலருக்கு உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. இது முறையாக கிடைக்கப்பெறாத ஆசிரிய-ஆசிரியைகள் நேற்று முன்தினம் கொரோனா நோயாளிகள் கணக்கெடுப்பு பணிக்கு செல்லவில்லை. சிலர், தங்கள் உடல் உபாதைகளை காரணம் காட்டி, மாநகராட்சி அதிகாரிகளிடம் விண்ணப்பம் கொடுத்து விலக்கு பெற்று உள்ளனர். இந்தநிலையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கலெக்டர்  எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதற்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஆசிரியை பலி
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்ட கலெக்டருடன் இணைந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் ஆசிரிய-ஆசிரியைகளைப் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது களப்பணியில் ஆசிரியர்களும் ஈடுபட்டோம். ஆனால் இந்த முறை, ஆசிரிய-ஆசிரியைகளின் ஒப்புதலை பெறாமல் அவர்களின் உடல்நிலை, குடும்ப உறுப்பினர்களின் நிலை உள்ளிட்ட எந்த ஒரு ஆலோசனையையும் செய்யாமல் கல்வித்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு எடுத்து களப்பணி செய்ய வேண்டிய ஆசிரிய-ஆசிரியைகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் களப்பணி செய்ய வேண்டிய ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு மாணிக்கம்பாளையம் பள்ளிக்கூட ஆங்கில பட்டதாரி ஆசிரியை மணிமேகலை என்பவரின் பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால், கடந்த வாரம் முழுவதும் கொரோனா பாதித்து பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் காலையிலேயே மரணம் அடைந்து விட்டார். இது கூட சரிபார்க்காமல் தான்தோன்றித்தனமாக கல்வித்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த பணியை திணிக்கிறார்கள்.
 பணியில் இருக்கும் பெரும்பாலான ஆசிரிய-ஆசிரியைகள் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருக்கிறோம். எங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது. பணியின்போதே இறந்து விட்டால் எங்கள் குடும்பத்துக்கு என்ன பாதுகாப்பு என்பதும் தெரியாது. நாங்கள் முன்களப்பணியாளர்களாகவும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் ஆசிரியர்கள் களப்பணி ஆற்றவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிப்பதும், விளக்க கடிதம் அனுப்புவதும் ஆசிரியர்கள் மீதான வன்மம் என்றே ஆசிரியர்கள் கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story