சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
சேலம்:
சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் அங்கு நேற்று ஏராளமானவர்கள் தடுப்பூசி போடுவதற்காக கூடினர்.
இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
வாக்குவாதம்
இந்த நிலையில் வரிசையில் காத்திருந்த சிலருக்கு தடுப்பூசி முடிந்துவிட்டது என்று கூறியதால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது முதல் தடுப்பூசி போட்டு 28 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
அதன்படி 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஏராளமானோர் வந்து காத்திருந்தோம். தற்போது தடுப்பூசி தீர்ந்துவிட்டது என்று கூறுகின்றனர். இதனால் வெகு நேரம் காத்துக்கிடந்து தடுப்பூசி போடாமல் வீட்டுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தட்டுப்பாடின்றி தடுப்பூசி போட வேண்டும், என்று கூறினர்.
காலதாமதம்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போதுமான அளவு உள்ளது. தலைமை மருத்துவமனையில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி வந்து சேரும். பொதுமக்கள் சிரமமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என்று கூறினர்.
சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றதால் நேற்று அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story