தளர்வில்லா முழு ஊரடங்கு: சேலத்தில் 2-வது நாளாக சாலைகள் வெறிச்சோடின
சேலத்தில் 2-வது நாளாக சாலைகள் வெறிச்சோடின
சேலம்:
தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி சேலத்தில் நேற்று 2-வது நாளாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். வைரஸ் பாதிப்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோன்று இதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.
இதை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 24-ந் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சேலத்தில் நேற்று 2-வது நாளாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
வெறிச்சோடி காணப்பட்டன
இதையொட்டி சேலம் மாநகர் முழுவதிலும் உள்ள மளிகை கடை, ஜவுளிக்கடை, காய்கறி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று 2-வது நாளாக அடைக்கப்பட்டு இருந்தன. அதேபோன்று உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட்டுகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் பரபரப்பாக காணப்படும் செவ்வாய்பேட்டை, லீ பஜார். சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, 4 ரோடு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்கள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
பஸ்கள் இயக்கப்படாததால் சேலம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் ஆகியவையும் வெறிச்சோடி காட்சி அளித்தன. இருப்பினும் தொற்று பாதித்தவர்களை அழைத்து வருவதற்காகவும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காகவும் சாலைகளில் அவ்வப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு சில கார், ஆட்டோக்கள் சென்றதை காண முடிந்தது.
விற்பனை வாகனங்கள்
ேமலும் ஊரடங்கையொட்டி மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் 2-வது நாளாக விற்பனை நடைபெற்றது. ஆனால் பல்வேறு இடங்களுக்கு வாகனங்கள் வரவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே அனைத்து இடங்களுக்கும் காய்கறி விற்பனை வாகனங்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story