சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது


சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 26 May 2021 4:10 AM IST (Updated: 26 May 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

சேலம்:
சேலத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
பலத்த மழை
மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்து வருகிறது. இருந்தாலும் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தது. மாலை சுமார் 4.30 மணி அளவில் வானம் இருள்சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. சேலத்தில் சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், 5 ரோடு, அழகாபுரம், அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் என மாநகரில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மாநகரில் பல இடங்களில் மழைநீருடன் சாக்கடை கால்வாய் கழிவுநீரும் கலந்து ஓடியது. குறிப்பாக கிச்சிப்பாளையம் அண்ணா வாத்தியார் தெருவில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து ஓடியதால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர்.
சாக்கடை கால்வாயை தூர்வாராததால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அந்த பகுதிகளில் உள்ள தெருக்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.
மின் வினியோகம் பாதிப்பு
இந்த மழையின் போது பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் இரவில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையினால் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story