செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 நாளில் 50 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 நாளில் 50 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
x
தினத்தந்தி 26 May 2021 2:18 AM GMT (Updated: 26 May 2021 2:18 AM GMT)

சுகாதாரத்துறையினர் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 நாளில் 50 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர், 

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவ தொடங்கியது. இதையடுத்து தமிழக அரசு உத்தரவு படி செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீசார் சார்பில் தினந்தோறும் நகரம் மற்றும் கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்த அளவிலேயே ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரை 80 ஆயிரத்து 38 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். 943 பேர் பலியாகினர்.

இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட நோய் தடுப்பு பொது சுகாதாரத்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் போதிய அளவில் பொதுமக்களிடையே கொரோனா 2-வது அலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தாத காரணத்தினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததாலும் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி முதல் இந்த மாதம் 24-ந் தேதி வரை கடந்த 25 நாட்களில் 50 ஆயிரத்து 549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 25 நாட்களில் 599 பேர் உயிரிழந்து இருப்பது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புறநகர் ஒட்டி அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், மண்ணிவாக்கம், கூடுவாஞ்சேரி, நந்திவரம், மறைமலைநகர், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், சிங்கபெருமாள்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற நகர்ப்புறங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவிகொண்டிருக்கிறது. மேலும் உயிர்பலிகளும் அதிகரித்து வருகிறது. இதற்கு முழுக்க முழுக்க செங்கல்பட்டு மாவட்ட பொது சுகாதாரத் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கு காரணமாக இந்த அளவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்.

செங்கல்பட்டு மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் கடந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான முக கவசங்கள், கிருமிநாசினிகள் போன்றவை சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பொதுமக்களுக்கு இலவசமாக முழு கவசங்களை வழங்கினார். இதே போல போலீசார், வருவாய் துறையினர் இணைந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் போன்றவற்றை இலவசமாக வழங்கினர். மேலும் கடந்த ஆண்டு யாராவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அந்த நோயாளியின் வீட்டுக்கு சுகாதாரத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் கொண்டு சென்று அந்த நோயாளியின் ஆம்புலன்சில் பத்திரமாக ஏற்றி ஆஸ்பத்திரியில் அனுமதித்து அந்த நோயாளியை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். மேலும் தொற்று ஏற்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி அமைப்பினர், சுகாதாரத்துறை இணைந்து தடுப்புகளை அமைத்து அந்த பகுதியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு வீடு வீடாக சென்று பரிசோதனைகளை அதிக அளவு மேற்கொண்ட காரணத்தினால் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தால் தற்போது மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரியில் இடம் கிடைக்காத கொரோனா நோயாளிகள் பலர் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்காமல் விட்ட காரணத்தால்தான் தற்போது அதிக அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி கொண்டிருக்கிறது.

மேலும் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் சேர்க்கப்படாமல் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இவர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க தவறிய காரணத்தால் தொற்று தினந்தோறும் அதிகரிக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் இனியாவது விழித்து கொண்டு கொரோனா நோயாளிகள் பட்டியலை தயாரித்து அவர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள், இலவசமாக முககவசம், கபசுர குடிநீர் போன்றவற்றை வழங்கி குணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவு தொற்று ஏற்படாதவாறு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story