ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மது கடத்திய 23 பேர் கைது 3 நாட்களில் நடவடிக்கை


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மது கடத்திய 23 பேர் கைது 3 நாட்களில் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 May 2021 9:24 AM IST (Updated: 26 May 2021 9:24 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மது கடத்திய 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்துக்கோட்டை, 

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு கடந்த திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்து கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

பொது போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டது. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். இவர்களின் பார்வை தற்போது ஆந்திரா மீது விழுந்துள்ளது. அதாவது ஆந்திராவிலும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மதுக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறந்து இருக்கின்றன. ஊத்துக்கோட்டை நகர எல்லையில் தாசுகுப்பம், காரணி கிராமங்கள் உள்ளன.

இதில் தாசுகுப்பம் கிராமத்தில் 3 மதுக்கடைகள், காரணி கிராமத்தில் 2 மதுக்கடைகள் உள்ளன. சென்னை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் இங்கு வந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.இதை தடுக்க சத்தியவேடு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் நாகலாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா, சத்தியவேடு சப்-இன்ஸ்பெக்டர் நாகார்ஜுன் ரெட்டி ஆகியோர் போலீசாருடன் மாறுவேடத்தில் கண்காணித்தனர். கடந்த 3 நாட்களில் மோட்டார் சைக்கிள்களில் சென்னைக்கு கடத்த முயன்ற 1,300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக சென்னை, செங்குன்றம், பெரியபாளையம் பகுதிகளை சேர்ந்த 23 பேரை கைது செய்தனர். 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story