காட்டூர்-தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணி துரிதப்படுத்த அமைச்சர் துரைமுருகன் உத்தரவு


காட்டூர்-தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணி துரிதப்படுத்த அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
x
தினத்தந்தி 26 May 2021 9:36 AM IST (Updated: 26 May 2021 9:36 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் ஏரி மற்றும் தத்தமஞ்சி ஏரிகளை ரூ.62 கோடியில் அதன் கொள்ளளவை மேம்படுத்தி புதிய நீர்தேக்கம் அமைக்கும் திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டு உள்ளார்.

திருவள்ளூர், 

சென்னையில் தலைமைச் செயலகத்தில் 2-வது நாளாக நேற்று 16 மாவட்ட அலுவலர்களுடன் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து 2-ம் நாளான நேற்று கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் சென்னை மண்டலத்திற்குட்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்கள் உள்பட 16 மாவட்டங்களில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அத்திக்கடவு அவினாசி நீர்பாசனம் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம், மேட்டூர் அணை உபரி நீரை நீரேற்றம் மூலம் சரபங்கா வடிநிலப் பகுதியில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீர்வழங்கும் திட்டம் ஆய்வு செய்யப்பட்டன.

தொடர்ந்து, உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம், கீழ்பவானி திட்டப்பகுதியில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் முன்னேற்றம் குறித்து தகவல்கள் அளிக்கப்பட்டன. நொய்யல் உப வடிநிலத் திட்டம், புதிய தடுப்பணைகள், அணைக்கட்டுகள் விவரம் தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் ஏரி மற்றும் தத்தமஞ்சி ஏரிகளின் கொள்ளளவை மேம்படுத்தி ரூ.62 கோடியில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் திட்டப்பணியின் முன்னேற்றம் மற்றும் விரைந்து பணிகளை முடிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. செப்பனிடுதல், புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள், அணைகள் புனரமைப்புத்திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் கழுவேலி ஏரியை மீட்டெடுக்கும் திட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரியினை மீட்டெடுக்கும் திட்டம், சென்னை காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் இதர மாவட்டங்களில் நடைபெறும் நீண்ட கால வெள்ளத் தணிப்புத்திட்டம், தூண்டில் வளைவுகள் மற்றும் கடலோர தடுப்புச் சுவர்கள் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

துறையின் தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் ஆகியோர் நீர் ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பணைகள், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் செப்பனிடப்படாமல் இருக்கும் நீர்நிலைகளுக்கு முன்னுரிமை வழங்கி திட்டப்பணிகளை செயல்படுத்த ஆய்வு மேற்கொண்டு விரைவில் அறிக்கை வழங்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், அரசு சிறப்பு செயலாளர் கே.அசோகன், நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கு.ராமமூர்த்தி, கோவை மண்டல தலைமைப் பொறியாளர் முரளிதரன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் டி.ரவீந்திர பாபு, தலைமைப் பொறியாளர் (திட்ட உருவாக்கம்) ஜி.பொன்ராஜ் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story