நாகையில் காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்ய நடமாடும் வாகனங்கள் - கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்
நாகையில் காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்ய நடமாடும் வாகனங்களை கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்,
முழு ஊரடங்கில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் வீடுகளுக்கே நேரடியாக மளிகை, காய்கறி, பழம் ஆகியவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.
அதன்படி நாகை நகராட்சி அலுவலகத்தில் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்ய நடமாடும் வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஏகராஜ் முன்னிலை வகித்தார்.
பின்னர் கலெக்டர் பிரவீன் நாயர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான
காய்கறி, மளிகை பொருட்கள், பால் உள்ளிட்டவற்றை காலை 6 மணிமுதல் பகல் 2 மணிவரை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அருகாமையில் உள்ள வார்டுகளில் விலை கொடுத்து வாங்கி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று (அதாவது நேற்று) 16 வாகனங்கள் மூலம் நாகை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் கவுதமன், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story