விளை நிலங்களில் காய வைக்கப்படும் தென்னை நார்க்கழிவுகள்
உடுமலை அருகே விளை நிலங்களில் தென்னை நார்க்கழிவுகளை காய வைத்து விற்பனை செய்யும் வகையிலான மாற்றுத் தொழில் விவசாயிகளுக்கு கைகொடுத்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போடிப்பட்டி
உடுமலை அருகே விளை நிலங்களில் தென்னை நார்க்கழிவுகளை காய வைத்து விற்பனை செய்யும் வகையிலான மாற்றுத் தொழில் விவசாயிகளுக்கு கைகொடுத்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னை நார்
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் தென்னை மரங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் தேங்காய்கள் மற்றும் இளநீர் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இந்த பகுதிகளில் தென்னை நார்த் தொழிற்சாலைகளும் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. இவர்கள் தேங்காய் உரிமட்டைகளிலிருந்து தென்னை நாரைப் பிரித்து எடுத்த பிறகு கிடைக்கும் தென்னை நார்க் கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் சாலை ஓரங்களில் போட்டு எரித்து வந்தனர். தற்போது இதன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதால் தென்னை நார்க் கழிவுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மனித சக்தி
மண்ணில்லா விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் இந்த தென்னை நார்க் கழிவுகளுக்கு வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தநிலையில் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் விவசாய நிலங்களில் தென்னை நார்க் கழிவுகளை உலர வைத்து விற்பனை செய்வது பலருக்கும் கைகொடுக்கும் தொழிலாக மாறியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
இன்றைய நிலையில் விவசாயம் என்பது மிகவும் கடினமான தொழிலாக மாறி விட்டது.விவசாயத்தை மேம்படுத்த அரசு பல ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்கிறது. ஆனாலும் முறையான திட்டமிடுதல் இல்லாதால் பெருமளவு நிதி விவசாயிகளுக்குப் பயன்படுகிறதேயன்றி விவசாயத்துக்குப் பயன்படுவதில்லை. மேலும் இன்றைய நிலையில் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. நடவு முதல் அறுவடை வரை எத்தனை நவீன எந்திரங்களை அறிமுகப்படுத்தினாலும் மனித சக்தி இல்லாமல் விவசாயம் செய்வது சிரமமான விஷயமாகவே உள்ளது. குறிப்பாக காய்கறிகள் சாகுபடியில் பெருமளவு மனித சக்தியே தேவைப்படுகிறது.
மண்ணை பாழாக்காத தொழில்
தற்போதைய நிலையில் ஆட்கள் பற்றாக்குறை மட்டுமல்லாமல் இடுபொருட்கள் விலை
உயர்வு, விளை பொருட்களுக்கு உரிய விலை இல்லாத நிலை, தண்ணீர்ப் பற்றாக்குறை, பருவநிலை மாறுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விவசாயிகளுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கி வருகிறது. இதனால் பலரும் விவசாயத்தைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அத்தகைய சூழ்நிலையில் தற்போது தரிசாக உள்ள விளை நிலங்களில் தென்னை நார்க் கழிவுகளை உலர வைத்துத் தருவதன் மூலம் ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. பல தென்னை நார்த் தொழிற்சாலைகளில் நார்க்கழிவுகளை உலர வைப்பதற்கு போதிய இடவசதி இருப்பதில்லை. அவர்களிடமிருந்து நார்க் கழிவுகளை வாங்கி வந்து விளை நிலங்களில் பரப்பி நன்கு உலர வைக்கிறோம்.
பின்னர் இவற்றை நாற்றுப் பண்ணைகள், கோழிப் பண்ணைகள், தென்னை நார்க் கட்டி உற்பத்தியாளர்கள் போன்றவர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடிகிறது. இதன்மூலம் மீண்டும் விவசாயம் செய்ய நினைக்கும்போது தென்னை நார்க் கழிவுகளுடன் கலந்து மண் மேலும் வளமானதாகவே இருக்கும். மழைக் காலங்களில் இந்த தொழிலுக்கு சிக்கல் ஏற்படும்போது மானாவாரியில் ஏதேனும் ஒரு பயிர் செய்து வருமானம் ஈட்டிக்கொள்ளலாம்.எவ்வாவு பிரச்சினைகள் இருந்தாலும் ஒவ்வொரு விவசாயியும் மண்ணை நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அந்தவகையில் மண்ணைப் பாழாக்காத தொழில் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story