கருகும் நிலையில் பயிர்கள்
தண்ணீர் பற்றாக்குறையால் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
தளி
தண்ணீர் பற்றாக்குறையால் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
தரிசு நிலங்கள்
தரிசு நில சாகுபடி என்பது முழுக்க முழுக்க பருவமழையை ஆதாரமாகக்கொண்டதாகும். ஒரு உழவு மழை பெய்த பின்பு நிலத்தை உழுது பண்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த ஓரிரு நாட்களில் தொடர் மழை பெய்தால் சாகுபடி பணிகள் தொடங்கப்படுகிறது. குறுகிய கால பயிர்களான உளுந்து, தட்டைபயிறு, பாசிப்பயிர், கொள்ளு, எள் போன்றவை பயிரிடப்படுகிறது. எந்தவித பாசன வசதியும் இல்லாமல் பருவமழையை ஆதாரமாகக்கொண்ட இந்த சாகுபடியில் செய்யப்படும் முதலீடு மீண்டும் திரும்ப வருமா? என்பது உறுதிபடத்தெரியாது. ஒரு ரூபாய் மதிப்புள்ள முதலீடு நிலத்தில் இடும் போதே அதன் நஷ்ட கணக்கு தொடங்கி விடுகிறது. மழை பெய்து காப்பாற்றினால் மட்டுமே முதலீட்டுத்தொகை திரும்ப வரும். லாபமும் குறைவு.
சாகுபடிபணி
ஆனாலும் விவசாயம் செய்து பழகிய உடல் உழைப்பு இல்லாமல் இருக்காது. லாபமோ நஷ்டமோ நிலம் லேசாக ஈரமானால் கூட சாகுபடி பணி தொடர்ந்து நடைபெறும். ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இந்த நிலங்களில் சிறு குறு விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். தரிசுநில சாகுபடியில் எதிர்பார்த்தளவு விளைச்சலை ஈட்ட முடியும். காரணம் என்னவென்றால் கோடை காலத்தில் நிலம் ஓய்வெடுத்து மழைக்காலத்தில் புத்துணர்வுடன் சாகுபடிக்கு தயாராகி விடுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை பெய்த பின்பு குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதையடுத்து தரிசு நில சாகுபடியில் விவசாயிகள் முனைப்பு காட்டினார்கள். கொள்ளு, எள், உளுந்து, தட்டைப் பயறு, பாசிப்பயறு, நிலக்கடலை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டது. அவற்றை விவசாயிகள் முறையாக பராமரித்து வந்தனர். செடிகளும் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. தரிசு நில சாகுபடியால் அனைத்து நிலங்களும் ஏதாவது பயிருடன் பசுமையாக காணப்படுகிறது.
தண்ணீர்பற்றாக்குறை
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடுமலை பகுதியில் கோடை வெய்யிலின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பயிர்கள் வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கருகும் நிலையில் உள்ளது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் பூவும் பிஞ்சுமாக உள்ள நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் கருகி வருவது விவசாயிகள் வேதனை அடையச் செய்துள்ளது. இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறியா? என்று விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
பெயரளவிலும் ஏட்டவிலும். உள்ள நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதுடன் மேடான நிலங்களில் புதிதாக குளங்களை உருவாக்குவதற்கு முன்வரவேண்டும். இதனால் நிலத்தடி நீர் இருப்பு உயரும். அத்துடன் நீர் மேலாண்மை திட்டத்திற்கு புதிய வடிவம் கொடுத்து தரிசு நிலங்களை மேன்மை அடைய செய்ய வேண்டும்.
இதனால் தானிய உற்பத்தியும் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகளும் பெருகும். சிறு, குறு விவசாயிகள் கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் வருமானமும் உயர்வதற்கான வழி பிறக்கும்.
Related Tags :
Next Story