வீட்டை விட்டு வெளியே வரும் கொரோனா நோயாளிகள் - வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை
வீட்டைவிட்டு வெளியே வரும் கொரோனா நோயாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கொரோனா பரிசோதனை முகாம் அதிகஅளவில் நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 41 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 34 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் அனைவரையும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது இல்லை.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்து அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் வசதி இல்லாதோர் மற்றும் குறைந்த அளவில் அறிகுறி உள்ளவர்களை வல்லம், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
அதிக அறிகுறி உடையவர்கள் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனை, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன. தங்களது விருப்பத்தின்பேரில் பலர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள கொரோனா நோயாளிகள் பெரும்பாலும் வெளியே வர முடியாது. அவர்கள் எப்போதும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் அனைவரும் அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை. சிலர், வீடுகளில் தனிமையில் இருக்காமல் வெளியே வீதிகளில் சகஜமாக சுற்றி வருகின்றனர். இவர்கள் மக்களோடு மக்களாக சென்று மருந்துக்கடைகள், ஓட்டல்களுக்கு செல்லக்கூடிய அதிர்ச்சிகரமான சம்பவங்கள் சில இடங்களில் நடைபெற்று வருகின்றன.
தஞ்சை மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், மளிகைக்கடைக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு வந்தபோது சுகாதாரத்துறையினர் அவரை எச்சரித்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தஞ்சை மாவட்டம் திருவோணம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் ஒரே வீட்டில் தந்தைக்கும், மகளுக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் சிகிச்சைக்காக செல்லாமல் வெளியே சுற்றி வந்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், 2 பேரையும் சிகிச்சைக்காக செல்லும்படி வலியுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை. பின்னர் இந்த தகவல் கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் சில இடங்களில் வீட்டிற்குள் இருக்காமல் வீட்டின் வாசலில் வந்து அமர்வது, வீட்டிற்கு முன்பு நிற்பது என கொரோனா நோயாளிகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் கூறும்போது, தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளில் சிலர், வீட்டைவிட்டு வெளியே சுற்றி வருகின்றனர். மருத்துவ விதிமுறைகளுக்கு முரணானது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story