காப்புக்காட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 மதுபாட்டில்கள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை அருகே காப்புக்காட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே எல்லை கிராமத்தில் உள்ள காப்புக்காட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார் தலைமையிலான போலீசார் எல்லை கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள காப்புக்காட்டில் 1000 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிளியூரை சேர்ந்த அய்யனார் (வயது 29) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தற்போது ஊடரங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பெங்களூருவில் இருந்து வெங்காயம் ஏற்றி வந்த லாரியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தி வந்துள்ளார். பின்னர் அதனை காப்புக்காட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story