கொரோனா விதிகளை மீறிய கேரட் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ‘சீல்’
ஊட்டி அருகே கொரோனா விதிகளை மீறிய கேரட் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக உரிமையாளர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பணிகளான விவசாய பணிக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கழுவி சுத்தம் செய்யப்படுகிறது.
பின்னர் விற்பனைக்காக பிற மாவட்டங்களுக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று ஊட்டி அருகே முள்ளிக்கொரை பகுதியில் உள்ள கேரட் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளர்கள் கேரட்டுகளை கழுவும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் நோய் தொற்று பரவும் அபாயம் இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தாசில்தார் குப்புராஜ், வருவாய் ஆய்வாளர் மகேந்திரகுமார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான அன்பு அண்ணா காலனியில் இருந்து விதிகளை மீறி தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்ததும் தெரியவந்தது. இதனால் மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அரசின் விதிமுறையை மீறிய கேரட் சுத்திகரிப்பு நிலையத்தை மூடி தாசில்தார் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி போலீசார் சம்பந்தப்பட்ட சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர் சிவராஜ், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்த வியாபாரிகள் 4 பேர், தொழிலாளர்கள் 2 பேர் என 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story