முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்
ஊட்டியில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கலெக்டர் வழங்கினார்.
ஊட்டி,
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சலூன் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி முடிதிருத்தும் தொழிலாளர்கள் 100 பேருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று கேட்டறிந்தார். முழு ஊரடங்கு முடிந்து கடைகள் திறக்கப்படும் போது, தடுப்பூசி செலுத்தாதவர்களின் கடைகள் திறக்க அனுமதிக்கப்படமாட்டாது. உடனடியாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றார். இதில் ஊட்டி தாசில்தார் குப்புராஜ் கலந்துகொண்டார்.
Related Tags :
Next Story