முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சையளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சையளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
கரூர்
ஆலோசனை கூட்டம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சையளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பிரசாந்த் முவடநேரே தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
19 மருத்துவமனைகளுக்கு அனுமதி
கரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க அப்பல்லோ மருத்துவமனை, அமராவதி மருத்துவமனை, ஏ.பி.எஸ் மருத்துவமனை, டாக்டர்.ஜி.ஜி மருத்துவமனை, அபிஷேக் ஆர்த்தோ மருத்துவமனை, கபிலா மருத்துவமனை, நாச்சிமுத்து மருத்துவமனை, ஸ்ரீ ரத்னா மருத்துவமனை, தீபாகண்ணன் மருத்துவமனை, நாதன் மருத்துவமனை, கிருஷ்ணா மெடிக்கல் சென்டர், கரூர் நர்சிங் ஹோம்.
அமிர்தா மருத்துவமனை, அனன்யா ஆர்த்தோ கேர், ஏ.பி.ஜெ.மருத்துவமனை, கே.ஜி. மருத்துவமனை, ராஜ் ஆர்த்தோ மருத்துவமனை, செந்தில் எமர்ஜென்சி கேர், ஸ்ரீ சக்தி மருத்துவமனை ஆகிய 19 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள்
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே முதல்-அமைச்சரின் மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க முடியும். எனவே, தொற்றாளர்களுக்கு கண்டிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
தொற்றால் பாதிக்கப்பட்டவரை பதற்றத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துவரும் நபர்களிடம் முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத்திட்டதில் சேர்ப்பதற்கான ஆவணங்கள் இருந்தால் தான் அனுமதிக்கப்படுவீர்கள் என்று தெரிவிக்காமல், மனிதநேயத்துடன் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும். நோயாளிக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க 3 நாட்கள் அவகாசம் உள்ளதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தேவைப்படும் நபர்களுக்கு சிகிச்சை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் அவர்களின் உடனிருப்பவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தனியார் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு 96 சதவீதமாகவோ அதற்கு அதிகமாகவோ இருந்து உடல்நிலை சீராக இருக்கும் பட்சத்தில் அவர்களை கொரோனா பாதுகாப்பு மையத்திற்கோ அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தலாம்.
அதேநேரத்தில், ஆக்சிஜன் அளவு குறைந்து உடனடியாக ஆக்சிஜன் அளிக்கப்படவேண்டிய சூழலில் உள்ள நபர்களை காலம் தாழ்த்தாது அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஆக்சிஜன் தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விளம்பர பலகை
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் முகப்பில் விளம்பர பலகை வைக்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மாவட்ட வருவாய் அதிகாரி லியாகத், சுகாதாரத்துறை இணை இயக்குனர் யானக்கண்பிரேம்நிவாஸ், இந்திய மருத்துவக்கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story