தகராறை சமாதானம் செய்த தந்தை அடித்துக் கொலை


தகராறை சமாதானம் செய்த தந்தை அடித்துக் கொலை
x
தினத்தந்தி 26 May 2021 11:02 PM IST (Updated: 26 May 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே அண்ணன்- தம்பி இடையே ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்த தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

செய்யாறு

அண்ணன்-தம்பி தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா வட தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன் (வயது 74) விவசாயி. இவருக்கு ஆனந்தன் (50), சேட்டு (45) என்கிற 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். 

மகன்கள் ஆனந்தன் மற்றும் சேட்டு இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சேட்டு வளர்த்துவரும் மாடுகள், ஆனந்தனுக்கு சொந்தமான நிலத்தில் பயிரிட்டு இருந்த பயிர்களை மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறினை உறவினர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். 

அடித்துக்கொலை

நேற்று முன்தினம் இரவு ஆனந்தன், சேட்டு வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மகன்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை பார்த்த தந்தை நாகப்பன் சமாதானம் செய்து வைக்க முயன்றார். 

அப்போது ஆத்திரம் அடைந்த ஆனந்தன், நாகப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நாகப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து சேட்டு கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Next Story