சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது


சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2021 11:04 PM IST (Updated: 26 May 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம்  சிதம்பரம் அண்ணாமலை நகர் அடுத்த சிவபுரி கிராமத்தில் போலி டாக்டர் ஒருவர் செயல்படுவதாக அண்ணாமலை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து  சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று விசாரித்தனர்.  அதில் சச்சிதானந்தம் (வயது 65) என்பவர் தனது வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மருத்துவ உபகரணங்கள், மாத்திரைகள் இருந்தது. ஆனால் சச்சிதானந்திடம் உரிய மருத்துவ சான்று எதுவும் இல்லை. மேலும் அவர் ஓய்வு பெற்ற தபால்காரர் ஆவார். இதையடுத்து சச்சிதானந்தத்தை போலீசார் கைது செய்தனர். 

பரபரப்பு

இதேபோன்று அதே பகுதியில் வாய்க்கால்கரை தெருவை  சேர்ந்த செல்வராஜ் (65) என்பரும் மருத்துவம் படிக்காமல் வீட்டில் வைத்து நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். இவர் சிதம்பரத்தில் உள்ள மெடிக்கலில் வேலை செய்து வந்தார். இவர்களிடம் இருந்து அனைத்து உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

ஒரே கிராமத்தில் 2 போலி டாக்டர்கள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story